Published : 14 Jul 2019 07:41 AM
Last Updated : 14 Jul 2019 07:41 AM

சென்னை - குமரி இடையிலான இரட்டை ரயில் பாதையை 2022-க்குள் முடிப்பதில் சிக்கல்: ஆண்டுக்கு சுமார் ரூ.700 கோடி நிதி தேவைப்படுகிறது

தமிழகத்தின் பல முக்கிய நகரங்களை இணைக்கும் சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால், திட்டமிட்டபடி 2022-க்குள் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை முக்கியமான வழித்தடமாகும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என முக்கியமான நகரங்களை இப்பாதை இணைக்கிறது.

சென்னை எழும்பூரில் இருந்து30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், பிற மாநிலங்களில் இருந்துசென்னை எழும்பூர் வழியாக 10 விரைவு ரயில்கள் இந்தவழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் பயணிகள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. ஆனால், போதிய ரயில் பாதைகள் இல்லாததால், கூடுதல் ரயில்கள் இயக்க முடிவதில்லை.

சென்னை - குமரி இடையே 739 கி.மீ. தூரத்துக்கான ஒருவழி பாதையை இரட்டை பாதையாக மாற்றும் பணி கடந்த 1998-ம்ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இதில், சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை பாதை பணி முடிந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குமரிக்கு இரட்டை பாதை அமைக்கும் திட்டத்தை 2022-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து ரயில்வே பணியாற்றி வருகிறது.

3 பாதைகளில் பணிகள்

எஞ்சியுள்ள இரட்டை பாதை பணியை நிறைவு செய்ய, மதுரை -வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில், திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி என 3 ரயில் பாதைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.3,500 கோடி. ஆனால், கடந்த 2017 முதல் இதுவரை ரூ.370 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் இத்திட்டங்களுக்கு நேரடியாக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. வங்கிக் கடன், தனியார்பங்களிப்பு போன்ற இதர வகைகளில் ரூ.449 கோடி நிதி ஆதாரம்பெறப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டப் பணிகளை முடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டபோது தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

இதர வழிகளில் நிதிதிரட்ட...

சென்னை - குமரி இரட்டை பாதை திட்டத்தை 2022-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று இலக்குநிர்ணயித்து பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் நடக்கும் இரட்டை பாதை திட்டங்களுக்கு மொத்தம் ரூ.901.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.851 கோடிக்கு இதர வழிகளில் நிதி திரட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவதிலும், திட்டமிட்டபடி பணிகளை முடிப்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிஆர்இயு துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது:பல்வேறு ரயில் திட்டங்களுக்கு மாற்று வழிகளில் நிதி ஆதாரம் பெற ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற நிதி முழுஅளவில் கிடைக்கும் என உறுதியாக கூறமுடியாது. இதுவரை பட்ஜெட்களில் அறிவித்தபடி நிதியும் திரட்டப்படவில்லை.

கூடுதல் நிதி தேவை

சென்னை - குமரி இரட்டை பாதையில் எஞ்சியுள்ள பணியைதிட்டமிட்டபடி முடிக்க ஆண்டுக்குசுமார் ரூ.700 கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால், போதிய அளவில் நிதி ஒதுக்கப்படுவது இல்லை. கடன், தனியார் பங்களிப்புடன் நிதி திரட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற நிதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதுபோன்ற முக்கிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x