

மத்திய அரசு தபால் துறையில் பணிபுரிய தமிழ் மொழி உள்ளிட்ட அந்தந்த மாநில மொழியிலும் தேர்வு எழுதுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அஞ்சல் துறையால் கிராமிய தபால் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வில் அந்தந்த மாநில மொழியில் வினாக்கள் இடம் பெறாது என்பதை மத்திய அரசு - உடனடியாக மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநில மொழியிலும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்து அதற்கான அறிவிப்பையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
குறிப்பாக தமிழ் நாட்டில் மத்திய அரசுப் பணியில் பணிபுரிவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் ஆங்கிலமும், இந்தியும் தெரியாத நிலையில் தமிழ் மொழி மட்டுமே தெரிந்த தமிழர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்றால் அவர்களுக்கு அந்த அலுவலகத்தில் உள்ள ஆங்கிலமும், இந்தியும் தெரிந்த பணியாளர்களுடன் மொழி தெரியாத காரணத்தால் சரிவர தொடர்புகொள்ள முடியாது.
அதாவது அந்தந்த மாநில மொழி தெரியாமல் பணியில் இருப்பவர்களால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு, சில நேரங்களில் வாக்குவாதமும் ஏற்படுகிறது. இப்படி நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் பணியில் சேர விரும்புபவர்கள் அவரவர்கள் சார்ந்த மாநில மொழியிலும் தேர்வு எழுதினால் தான் அந்தந்த மாநில மக்கள் பயன்பெற ஏதுவாக இருக்கும்.
ஏற்கெனவே அஞ்சல் துறையில் தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்ற நிலையில் தேர்வு எழுத காத்திருப்பவர்களுக்கு திடீரென்று அஞ்சல் துறை அறிவித்திருக்கும் அறிவிப்பால் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிராமம் முதல் பெருநகரம் வரை அஞ்சல் துறையின் சேவை ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது. அப்படி இருக்கும் போது அஞ்சல் துறையில் மாநில மொழியைப் புறக்கணித்து விட்டு தேர்வு நடத்துவது ஏற்புடையதல்ல.
எனவே மத்திய அரசு - அஞ்சல் துறையால் தற்போது திடீரென்று வெளியிடப்பட்ட அந்தந்த மாநில மொழியில் தேர்வு எழுத முடியாத நிலையை மாற்றி அந்தந்த மாநில மொழியிலும் தேர்வு எழுதக்கூடிய நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.