

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை பொதுமக்களுக்காக அதிகரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை பொதுமக்களுக்காக அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அத்திவரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து, காண வரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும், பாதுகாப்பும் தமிழக அரசாங்கம் செய்திட வேண்டும்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள், எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசாங்கம் உதவி செய்திடவேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.