

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் தருவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
தென்காசியில் நடந்த மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரை அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர்கள் ஷில்பா பிரபாகர் சதீஷ், சந்தீப் நந்தூரி மற்றும் கட்சியினர் வரவேற்றனர்.
விமான நிலையத்துக்கு வெளியே முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, மீண்டும் கட்சியை வலுப்படுத்தி, அடுத்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் தெரிவித்திருந்தோம். எங்களது அழைப்பை ஏற்று விலகிச் சென்றவர்கள் படிப்படியாக தாய் கழகத்தில் தங்களை இணைந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பிரதமரை சந்தித்தபோது கூட, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
சேலம் உருக்காலை பிரச்சினை என்பது பொது பிரச்சினை. பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து கொண்டிருக்கிற நிறுவனம். இந்த நிறுவனத்தை தனியாருக்கு ஒப்படைக்கக்கூடாது என்ற அடிப்படையில், மற்ற மாநிலத்தில் ஒரு பிரச்சினை என வரும்போது எப்படி ஒன்றிணைந்து செயல்பட்டு அந்த பிரச்சினையை தீர்க்கிறார்களோ, அதன் அடிப்படையில் எந்தவித மன மாச்சரியம் இல்லாமல் இன்றைக்கு அனைவரும் இணைந்து குரல் கொடுத்து, தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுப்பதற்காக ஒன்றாக குரல் கொடுத்துள்ளோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும். அதை நாங்கள் வலியுறுத்துவோம்.
காவேரி - கோதாவரி இணைப்புக்கு விரிவான திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை தயாரித்த பின்னர்தான் அதற்கு தேவையான நிதி எவ்வளவு என்ற கணக்கிட்டு, மத்திய அரசு முடிவெடுக்கும். இதற்கான விரிவான திட்டம் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்" என்றார் அவர்.