Published : 09 Jul 2019 02:01 PM
Last Updated : 09 Jul 2019 02:01 PM

ஜெயலலிதா கோடநாட்டில் தங்கினார் என்பதற்காக அதையும் அரசு இல்லமாக மாற்றுவீர்களா?- அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? கோடநாட்டில் தங்கினார் என்பதற்காக அதையும் அரசு இல்லமாக மாற்றுவீர்களா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் ஜெயலலிதாவிற்கு ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், உயர் நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க வேண்டுமென தீபக், தீபா தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், 1990-91 முதல் 2011-12 வரையிலான நிதியாண்டுகளில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய செல்வ வரி (Wealth Tax) 10 கோடியே 12 லட்சத்து 01 ஆயிரத்து 407 ரூபாய் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, 2005-06 முதல் 2011-12 வரையிலான நிதியாண்டுகளில் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி 3 கோடியே 51 லட்சத்து 72 ஆயிரத்து 267 ரூபாயும், அதற்கான அபராதம் 3 கோடியே 11 லட்சத்து 25 ஆயிரத்து 453 ரூபாயைச் சேர்த்து 6 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரத்து 720 ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி பாக்கிகளுக்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் எல்ல ரெட்டி குடா ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சொத்து, சென்னை மந்தவெளி புனித மேரி சாலையில் உள்ள சொத்து என நான்கு சொத்துகள் 2007, 2013 போன்ற ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், 1000 கோடி ரூபாய் வரையிலான ஜெயலலிதாவின் சொத்துகள் தனி நபர் ஒருவர் நிர்வகிக்க கேட்க முடியாது என்பதால், தீபக், தீபா ஆகியோரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரர்கள் தொடர்ந்த மனு இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தனி நீதிபதி தள்ளுபடி செய்திருப்பதாக தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் - அப்துல் குத்தூஸ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வழக்கை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரினார்.

அப்போது, தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபிக்கிறோம் என்றும், தங்கள் ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை வெறும் 35 கோடி ரூபாய்க்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளதாகவும்,  அது 100 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இடம் என்றும் தெரிவித்தனர்.

அந்த இடத்தை நினைவில்லமாக்க அரசு உத்தேசித்திருப்பதையும் சுட்டிக்காட்டினர். அப்போது நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரை நிலைக்கச் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றதே. அமைச்சர்கள் கூட தினமும் தங்கள் பேச்சைத் தொடங்கும்போது ஜெயலலிதாவைப் புகழ்ந்துதானே பேச தொடங்குகிறார்கள்.

ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? கோடநாட்டில் தங்கினார் என்பதால் அதையும் மாற்றுவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்காக ஜூலை 22 மதியம் 2.15 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x