

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்புத் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய ஆழ்வார் சன்னதியில் ஆணி ஸ்வாதி திருவிழா உற்சவம் கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினமும் பெரிய ஆழ்வார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக பெரிய ஆழ்வார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க செப்பு தேருக்கு கொண்டு வரப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பெரியாழ்வார் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேரில் வைத்து பெரியாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற செப்பு தேரோட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கோஷம் எழுப்பியபடியே பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.தேர் 4 ரத வீதி வழியாக வந்து பின்னர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர் கீழரத வீதி பகுதியில் வரும் போது போக்குவரத்து சீர் செய்யப்படாததால் வேகமாக வந்த தேர் அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதனால் சிறிதுநேரம் தேர் இழுப்பது தடைபட்டது. தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக வளம் வந்த தேர் நிலையத்தையடைந்தது.