

குன்னூரில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில் அண்மையில் நடந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி இன்று உயிரிழந்தார்.
குன்னூர், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். இதில், கோவை தனியார் மருத்துவமனையில் படு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சூரஜ்குமார் சிகிச்சை பலன் இன்றி இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமானது. இதனால் தொழிற்சாலை வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் ராணுவத்திற்குத் தேவையான வெடி குண்டுகளுக்குப் பயன்படும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்திக்காக, நைட்ரஜன் போன்ற வேதிப்பொருட்கள் தொழிற்சாலையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உற்பத்திகாக பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 29-ம் தேதி தொழிற்சாலையில் ஒரு பிரிவாக கார்டைட் பிரிவிலுள்ள 747 பிரிவு கட்டிடத்தில் 3 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சூரஜ்குமார், ராபின், சற்குண முரளி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மூவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சூரஜ்குமார் இன்று காலை கோவை மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.