Published : 10 Jul 2019 01:18 PM
Last Updated : 10 Jul 2019 01:18 PM

ராகுல்காந்தியை இழிவுபடுத்திய சுப்பிரமணியன் சுவாமி: கே.எஸ். அழகிரி கண்டனம்

ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசியலில் ஆதாரமற்ற அவதூறுகள், இழிவுபடுத்தும் குற்றச்சாட்டுக்கள், அச்சுறுத்தும் வகையில் விமர்சனங்கள் செய்வது பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு கைவந்த கலையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனால் தான் பாஜகவுக்கு எவ்வளவு பல்லக்கு தூக்கினாலும் அவரை கண்டு கொள்ள எவரும் தயாராக இல்லை.

அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் தான் பாஜக செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் பாஜக தலைமைக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்து பாஜக தலைமை கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அரசியலில் சுப்பிரமணியன் சுவாமி தொல்லை தருகிற இழிவான மனிதராகவே கருதப்படுவதால் எல்லோரும் அவரை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் குறித்து கருத்து கூறும்போது, தேவையில்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.

இத்தகைய அவதூறான கருத்தை கூறியதற்காக சுப்பிரமணியன் சுவாமி மீது நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, 502 (உட்பிரிவு 2), 511 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரிவுகளின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்குகிற அளவுக்கு நீதிமன்றங்கள் தண்டிக்கிற வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அரசியலில் நீண்டகாலமாக சுப்பிரமணியன் சுவாமியினுடைய யோக்கியதையையும், அருகதையையும், அனைவரும் அறிவார்கள். தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக நடைபெற்ற விநோதமான ஆர்ப்பாட்டங்கள் எத்தகையது என்பதையும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற சுப்பிரமணியன் சுவாமிக்கு பாடம் கற்பிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

இந்திய அரசியலில் நேரு பாரம்பரியத்தின் அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் எத்தகைய பங்களிப்பை ஆற்றினார்கள் என்பதை சுப்பிரமணியன் சுவாமிக்கள் மறுத்தாலும், வரலாறு மறுக்காது. இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் அமோக ஆதரவு அளித்து, நேரு பாரம்பரியத்தில் ராகுல்காந்தி தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பாரம்பரியத் தலைமையை அற்ப அரசியல் நடத்துகிற சுப்பிரமணிய சுவாமியால் கொச்சைப்படுத்திவிட முடியாது.

எனவே, அப்பழுக்கற்ற பதவி மறுப்பாளரான எங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது இத்தகைய இழிவான விமர்சனங்கள் செய்தை சுப்பிரமணியன் சுவாமி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி அவர் நிறுத்திக் கொள்ளவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இனியும் இத்தகைய இழிவான பிரச்சாரத்தை மேற்கொள்வாரேயானால் ஜெயலலிதா பாணியில் எதிர்ப்பு போராட்டம் நடத்தாமல், ஜனநாயக ரீதியில் சுப்பிரமணியன் சுவாமியை கடுமையாக விமர்சிக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்",என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x