வெள்ளிக்கிழமை திருமணம்; மது ஒழிப்புக்காகப் போராடும் நந்தினியை விடுதலை செய்க: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை திருமணம்; மது ஒழிப்புக்காகப் போராடும் நந்தினியை விடுதலை செய்க: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

மது ஒழிப்புக்காகப் போராடி வரும் நந்தினியை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மது ஒழிப்புப் போராட்டம் உட்பட மிக முக்கியமான போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் மீது தொடர்ந்து தமிழக அரசு அடுக்கடுக்கான வழக்குகளைத் தொடுத்து ஜாமீனில் வெளி வராதபடி பதிவு செய்வது, கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.

மிக அத்தியாவசியமான பிரச்சினைகளின் மீது போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, மது ஒழிப்பை வலியுறுத்தியும், தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தியும் தொடர்ந்து போராடிவரும் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் 'மது உணவுப்பொருளா' என்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார். இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மது ஒழிப்புக்காக பல்வேறு இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. மது உணவுப்பொருளா என்ற கேள்வி, சமூகத்தில் நிலவுகின்ற ஒன்றே.

நந்தினி திருமணம் வரும் ஜூலை 5-ம் தேதி நடக்கவுள்ள சூழலில், அவரைக் கைது செய்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது. தமிழக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இவ்வாறு சமூக அக்கறையுடன் போராடுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது தமிழகத்தில் அமைதியற்ற சூழலுக்கே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்", என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in