Published : 08 Jul 2019 07:35 PM
Last Updated : 08 Jul 2019 07:35 PM

ஜெயலலிதா வகுத்துத் தந்த 69% இட ஒதுக்கீட்டில் அரசு உறுதியாக நிற்கிறது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

மத்திய அரசு தரும் 25% இடங்களால், கூடுதல் இடங்களோடு சேர்த்து மொத்தம் 3,825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபின், 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும் என ஓபிஎஸ் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது:

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்துத் தந்த வழிமுறையின்படி தமிழக அரசு தொடர்ந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டிக் காத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு (Economically Weaker Section - EWS) 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவற்றிற்கு உரிய திருத்தங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி 12.1.2019 அன்று அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய சமூக நீதி அமைச்சகம், இந்த இட ஒதுக்கீட்டினை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருவரின் வருடாந்திர குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளதன் அடிப்படையிலும், அவருடைய குடும்பச் சொத்துகளின் அடிப்படையிலும், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறை பாதிக்கப்படாமல், இந்த இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு இந்திய மருத்துவக் குழுமம் (Medical Council of India) அனைத்து மாநில அரசுகளிடமிருந்து கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 3,500 மருத்துவ பட்டப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில், 15 விழுக்காடு இடங்கள், அதாவது 525 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட பின்பு, எஞ்சியுள்ள 85 விழுக்காடு இடங்கள், அதாவது 2,975 இடங்களில், தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான, இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில அரசு விண்ணப்பித்தால், கூடுதலாக 1000 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.

இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 150 இடங்கள் போக தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு 850 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். எனவே, மொத்தமாக மாநில ஒதுக்கீட்டில் வரக்கூடிய 3,825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபின், தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில், 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உருவாக்கி, இட ஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விரிவான விளக்கங்களை சுகாதார அமைச்சர் எடுத்துரைப்பார்.

அதனைத் தொடர்ந்து இப்பொருள் குறித்து கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்”.

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x