Published : 10 Jul 2019 03:17 PM
Last Updated : 10 Jul 2019 03:17 PM

உயிர் என்ன வெல்லமா?- ஒருவாரம் டூட்டி செய்: தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு நீதிபதி அளித்த வினோத தண்டனை

தற்கொலை செய்துக்கொள்வதாக முடிவெடுத்து பின்னர் அதிலிருந்து பின்வாங்கி அதையெல்லாம் வீடியோவில் போட்டு விளம்பரம் தேடிய பெண்ணுக்கு நீதிபதி வினோத தண்டனையை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் தீபா(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்யும் ஒரு இளைஞர் அவரை தரக்குறைவாக பேசியதாகவும் இதைக்கண்டித்த தன்னைப்பற்றி தன் கணவரிடம் தப்புத்தப்பாக கூற இதனால் அதை நம்பிய கணவர் தன்னிடம் சண்டை போட்டதாகவும் முகநூலில் காணொலியில் பதிவில் தெரிவிக்கிறார்.

தன்னை வேலை விட்டு நிறுத்திவிட்டதாக தெரிவிக்கிறார். பின்னர் தீபா தனது நிலையை விளக்கி காணொலியில் தனக்கு வாழப்பிடிக்கவில்லை ஆகவே தற்கொலை செய்துக் கொள்ளப்போகிறேன், விஷம் அருந்துகிறேன் என பாட்டிலில் உள்ள திரவத்தை குடித்தார்.

நான் சும்மா சொல்கிறேன், தண்ணீர் குடித்து ஏமாற்றுகிறேன் என்று நினைக்கலாம், ஆனால் இங்கப்பாருங்க என திரவத்தை குடிக்கிறார். இதை பார்க்கும் அனைவரும் ஷேர் பண்ணுங்க என்று கூறுகிறார். அந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து பலரும் போலீஸாருக்கு புகார் அளித்த நிலையில் காரைக்குடி போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் விஷம் என சோப் ஆயிலை அருந்தி நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன் கொண்டுச் செல்லப்பட்டது. காரைக்குடி போலீஸார் மற்றும் தீபாவிடம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார்.

பின்னர் விசாரணையில் தீபாவை நீதித்துறை நடுவர் கண்டித்தார். உயிர் என்ன வெல்லமா? எதில் விளையாடுவது என்று தெரியாதா? தற்கொலை செய்வது போன்று நாடகமாடிய நீ உயிரின் மதிப்பை உணரவேண்டும்.

அதனால்  அரசு மருத்துவமனையில் ஒருவார காலத்திற்கு தினமும் சென்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் உயிரின் மதிப்பை விளக்கி கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்று நூதனமான தண்டனையை அளித்தார்.

நீதித்துறை நடுவர் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார். இதேப்போன்று தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்களை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை விபத்து காயப்பிரிவில் ஒருவாரம் அட்டெண்டர் பணி செய்யவும் நீதிபதி தண்ட்னை அளித்தால் குற்ற எண்ணிக்கை குறையும் என போலீஸார் மத்தியில் பேச்சாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x