Published : 11 Jul 2019 05:21 PM
Last Updated : 11 Jul 2019 05:21 PM

தைரியத்தையும், உறுதியையும் கொடுத்த சிறைவாசம்; வேலூரில் மதுவுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: நந்தினி

 

சிறைவாசம் தைரியத்தையும், உறுதியையும் கொடுத்திருப்பதாகவும் வேலூரில் மதுவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சட்ட மாணவி நந்தினிக்கும், குணா ஜோதிபாசு என்பவருக்குக்கும் கடந்த 5-ம் தேதி மதுரையில் திருமணம் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சிவகங்கை திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் 2014-ல் மதுக் கடைகளை மூடக் கோரி துண்டுப் பிரசுரங்களை வழங்கிய வழக்கில் நந்தினியும், அவரது தந்தையும் கடந்த ஜூன் 27-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தை அவமதித்த புகாரில் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால், கடந்த 5-ம் தேதி நடக்கவிருந்த நந்தினி திருமணம் நின்றுபோனது.

இதற்கிடையே நேற்று முன் தினம்  (ஜூலை 9) நந்தினிக்கும், அவரது தந் தைக்கும் திருப்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து நந்தினி வெளியே வந்த நிலையில், இருவருக்கும் தென்னமநல்லூரில் உள்ள குல தெய்வக் கோயிலில்  நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நந்தினி, அதில் அவர் பேசியுள்ளதாவது:

''சமூகத்தில் நடக்கும் மோசடிகளின் பிரதிபலிப்பே சிறை. நானும் அப்பாவும் 13 நாட்கள் சிறையில் இருந்தோம். இந்த சிறைவாசம் தைரியத்தையும் உறுதியையும் அளித்திருக்கிறது. கொலை, கொள்ளை, தவறான உறவுமுறைகளால் சிறையில் நிறையப் பெண்கள் இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களிடம் பேசினேன். அவர்கள் சிறைக்கு வந்ததற்கான முக்கியக் காரணம், அவர்களுடைய கணவர்களின் குடிப்பழக்கமே.

அப்பாவும் 1,500 ஆண் கைதிகளுக்கு இடையே மத்திய சிறையில் இருந்தார். அதில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்கள் அப்பாவிடம் சொன்னதும் ''போதையில் குற்றத்தைச் செய்துவிட்டேன்'' என்பதுதான். தமிழக அரசு சமுதாயத்தை குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றியிருக்கிறது. சட்ட, ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, அரசைக் கேள்வி கேட்க மறுக்கிறது. டாஸ்மாக்குகளை மூட உத்தரவிடுவதில்லை. குடி என்கிற ஒற்றை விஷயத்தை வைத்து, தமிழ்நாட்டையே நாசப்படுத்திவிட்டனர்.

சிறையில் உடன் இருந்த ஓர் அக்கா, டாஸ்மாக் மட்டும் இல்லையென்றால், சிறையே தேவைப்படாது என்கிறார். மதுவுக்கு எதிராக வெளியே இருந்து போராடியதைக் காட்டிலும் சிறைக்குச் சென்றபோது உள்ள பிரச்சினைகளை உணர முடிந்தது. தமிழக அரசின் போக்குகளைக் கண்டித்துத் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் நின்றுபோன தேர்தல் மீண்டும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேலூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று, அங்குள்ள மக்களைச் சந்திக்க உள்ளோம். அவர்களிடம் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளோம்.

மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, மிகப்பெரிய போராட்டத்தை வேலூர் தொகுதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கூடிய விரைவில் வேலூர் முழுக்க, டாஸ்மாக்குக்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்.''

இவ்வாறு பேசியுள்ளார் நந்தினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x