உள்ளாட்சித்தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்?- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சித்தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்?-  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
2 min read

இதுவரை ஏன் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்தாததால் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மக்கள்நலப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன.

 எனவே, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கடந்த மே மாதம் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில் நடத்த முடியாமல் போனதற்கு, வழக்குகளே காரணம். மேலும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளால் உள்ளாட்சித் தேர் தலை குறித்த காலத்துக்குள் நடத்த முடியவில்லை என மாநில தேர்தல் ஆணையமே தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

புதிதாக மறுவரையறை செய்த வார்டுகளில், 2011 மக்கள்தொகை கணக்கின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இந்த பணிகள் முழுமையடைந்து, அதன்பிறகு சமீபத்திய வாக்காளர் பட்டியலை உள்ளாட்சித் தேர்தலுக்காக சரிபார்க்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணியின் காரணமாக, வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை எனவே, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்திருந்தார். இதனிடையே அனைத்துப்பணிகளும் முடிந்துவிட்டது. வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி முடிந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் வழக்கை வேறொரு தேதிக்கு மாற்ற தமிழக அரசு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதாக மனுதாரர் ஜெய்சுக்கின் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி இதுவரை ஏன் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை?, உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்?  என மாநில தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரை செய்யும் பணி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்ததால் தான் தேர்தலை நடத்த முடியவில்லை என்று பதிலளித்தார்.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகளை எப்பொழுது செய்து முடிப்பீர்கள்? என்பதை இரண்டு வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in