Published : 09 Jul 2019 12:05 PM
Last Updated : 09 Jul 2019 12:05 PM

மாநிலங்களவைத் தேர்தல்: வைகோ தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழகத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத்ரேயன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது.

அதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன்படி வரும் 18-ம் தேதி புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து, திமுக போட்டியிடும் மூன்று இடங்களில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகியோரும், மீதமுள்ள ஒரு இடத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சாந்தி சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதையடுத்து மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டதால், வைகோ மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேசத் துரோக வழக்கில் வைகோ சிறை தண்டனை பெற்றதால், மாநிலங்களவைத் தேர்தலுக்கான அவரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதனால், நேற்று (திங்கள்கிழமை) வைகோவுக்கு மாற்று வேட்பாளராக திமுகவின் என்.ஆர்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தான் மாநிலங்களவைக்குச் செல்வதாக இருந்தால் மட்டுமே அந்த இடம் மதிமுகவுக்கு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தலின் போது கூறியதாகவும், இது எங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் எனவும், அதனால் தான் சொல்லித் தான் திமுகவின் சார்பில் மாற்று வேட்பாளர் நிறுத்தப்பட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.

மேலும், தன்னுடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், என்.ஆர்.இளங்கோவன் தன் மனுவை வாபஸ் வாங்கிவிடுவார் எனவும் வைகோ கூறினார்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரும் 11 ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். இதில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இதையடுத்து, திமுகவின் என்.ஆர்.இளங்கோவன் தன் மனுவை வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x