

உதகை அருகே உள்ள காமராஜர் அணையில் 6 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வருவாய்த் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தலைகுந்தா பகுதி உள்ளது. இதனருகில் உள்ள காமராஜர் அணை மிகவும் பிரபலமானது. இங்கு உள்ளூர் மக்கள் மீன் பிடிப்பது வழக்கம்.
அதே போன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு வழக்கம் போல் கார்த்திக் என்னும் இளைஞர் உட்பட நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அணையில் 6 பழங்கால சாமி சிலைகள் இருப்பதைக் கண்டனர்.
இது குறித்து அவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வருவாய்த் துறையினர் சிலைகளைக் கைப்பற்றி, அவை கடத்தி வரப்பட்டனவா? எந்த நூற்றாண்டை சேர்ந்தவை என்பன குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.