

அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை, முன் விரோதம் காரணமாக, கத்தியால் தாக்கிய எஸ்.ஐ.மகன் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
எம்ஜிஆர் நகர் , புகேழந்தி தெருவைச் வசிப்பவர் பிருந்தா (31). இவர், அதே பகுதியில் உள்ள சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையில், அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
பிருந்தாவுடன் கடந்த 2 ஆண்டுகளாக திலீபன் (34) என்பவர் அறிமுகமான நிலையில்,இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில பிரச்சினைகள் காரணமாக பிருந்தா மற்றும் திலீபன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிருந்தா திலீபனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். பிருந்தா தன்னை அலட்சியம் செய்வதாக எண்ணி, ஆத்திரமடைந்த திலீபன் நேற்று மதியம், தனது நண்பர்களான ஆர்த்தி வேலு (32), கோகுல் (31), ஆனந்த் (30) ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு, அழகு நிலையம் சென்று, பிருந்தாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பிருந்தாவை நான்குபேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.
பின்னர், அவரிடமிருந்து 1-1/2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில், கன்னத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிருந்தா, எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் அளித்தார்.
பிருந்தாவின் புகாரைப்பெற்று வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீஸார், தலைமறைவாக இருந்த திலீபன் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஆர்த்தி வேலு, போலீஸ் எஸ்.ஐ ஒருவரின் மகன் ஆவார். பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான, ஆர்த்தி வேலு மீது ஏற்கனவே, எம்ஜிஆர் நகர், குமரன் நகர், திருமுல்லைவாயில் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.