

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்குப் பேருதவியாக இருந்தவர் உதயநிதி என்று முத்தரசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் இருந்த அப்பதவி, தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சினிமாவில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், முரசொலி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். கடந்த தேர்தலில் திமுகவுக்காகத் தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரச்சாரம் செய்தார் உதயநிதி. தற்போது அவருக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ''உதயநிதிக்குப் பொறுப்பு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியப் பொறுப்பு வகித்தார் உதயநிதி. அவரின் பிரச்சாரம் பொதுமக்களிடத்திலும் வாக்காளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரம் பேருதவியாக இருந்தது. அப்படிப்பட்ட சிறந்த இளைஞருக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு எனது சார்பிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இதயபூர்வமான வாழ்த்துகள். அத்துடன் பொதுவாழ்வில் உதயநிதி மென்மேலும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் முத்தரசன்.