

உதகையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பபட்டார். வீட்டில் கொள்ளை நடக்காததால், எதற்காகக் கொலை நடந்திருக்கும் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகை, நொண்டிமேடு பகுதியில் வசித்தவர் உமா (43). இவர் தனது கணவர் பசுவராஜிடமிருந்து பிரிந்து, இரு மகன்கள் ஆகாஷ் மற்றும் அபிஷேக் உடன் வசித்து வந்தார்.
ஆகாஷ் கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் அபிஷேக் உதகை, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி முடிந்ததும் பகுதி நேரமாக தனியார் காட்டேஜில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு அபிஷேக் பணிக்குச் சென்று காலை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது கதவு திறந்திருந்ததால், உள்ளே சென்று தனது தாயைத் தேடி உள்ளார்.
படுக்கை அறையில் தாய் உமா, ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உமா பிணமாகக் கிடந்துள்ளார்.
கொலை குறித்து மகன் அபிஷேக் போலீஸாருக்குத் தகவல் அளித்தார். நீலகிரி எஸ்.பி., சி.கலைச்செல்வன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, 'வீட்டினுள் பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை. இந்நிலையில், வீட்டில் உமா தனியாக இருப்பதை அறிந்து கொலையாளி வந்திருக்கக்கூடும். அவர் உமாவுக்குத் தெரிந்தவராக இருக்கலாம். அதனால்தான் உமா கதவைத் திறந்திருக்கலாம்.
சமையல் அறையில் உமாவின் கழுத்தை அறுத்து, பின்னர் படுக்கையறையில் படுக்க வைத்துள்ளனர். சமையல் அறை மற்றும் படுக்கை அறையில் ரத்தக் கறை உள்ளது. கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறோம்' என்றனர்.