Published : 10 Jul 2019 04:45 PM
Last Updated : 10 Jul 2019 04:45 PM

இந்திய பயணிகளுக்கு சிறப்பு விமான சலுகைக் கட்டணம்: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் புது முயற்சி

சுற்றுலா பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்க, சிங்கப்பூர்  செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சிங்கப்பூர் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைக் கட்டணங்களை அறிவித்துள்ளன.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 14 லட்சத்து 40 ஆயிரம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த 4 ஆண்டாக இந்தியாவில் இருந்து 10 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் சிங்கபூர் சென்றுள்ளனர்.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரிசையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்க சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் இந்திய, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குனர் ஜி.பி.ஷ்ரீதர், இந்தியா ஏரியா இயக்குனர் ஆதிரியன் கோங் ஆகியோர் கூறுகையில், ‘‘சிங்கப்பூருக்கான மிக முக்கியமான மூல சந்தையாக இந்தியா திகழ்கிறது. சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்கவும், இந்திய சுற்றுலா பயணிகளை தக்க வைக்கவும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஓட்டல்கள், விமான நிறுவனங்கள், ஒருங்கிணைந்த ஒய்வு விடுதிகளுடன் இணைந்து சிங்கபூர் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் ‘ரோட் ஷோ’ என்ற சிங்கப்பூர் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை, திருவனந்தபுரம், கொல்கத்தா, ராஜ்கோட், குவாஹட்டி, நாக்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய 8 முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறோம்.

சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்தியாவில் உள்ள சர்வதேச சுற்றுலா அமைப்புடன் இணைந்து சுற்றுலா இசை ஆல்பம் வெளியிட உள்ளோம். சிங்கப்பூர் சுற்றுலாவை  சந்தைப்படுத்த பேடிஎம், ஓலா போன்ற புகழ் பெற்ற பிராண்ட்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.

சமூக சுற்றுலா இணையதளமான டிரிபோடோவுடன் இணைந்து சிங்கப்பூர் வீக் எண்டர் நிகழ்ச்சியை புதுடில்லியுடன் நடத்தினோம். அதுபோன்ற நிகழ்ச்சிகளை இந்தியாவின் மற்ற நகரங்களிலும் தொடர்ந்து நடத்த உள்ளோம்.

ஸ்கூட், சில்க் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் சிங்கப்பூர் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு சலுகை கட்டணங்களை அறிவிக்க உள்ளன. இந்த சிறப்பு சலுகை கட்டணங்கள், இம்மாதம் கடந்த 8ம் தேதி முதல்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சலுகை விமான கட்டணம் இம்மாதம் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த விமான டிக்கெட்டுகளை அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x