Published : 08 Jul 2019 03:56 PM
Last Updated : 08 Jul 2019 03:56 PM

நான்காவது வேட்பாளர் போட்டி: மதிமுக, அதிமுகவில் யாருக்கு செக் வைக்கிறது திமுக?- ரவீந்திரன் துரைசாமி பேட்டி

தமிழகத்தில் நடக்கவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் நான்காவதாக ஒரு வேட்பாளரைப் போட்டியிட வைப்பதன் மூலம் மதிமுக, அதிமுகவில் யாருக்கு சங்கடத்தை உருவாக்குகிறது திமுக என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து அதற்கான வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது.

6 மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது திமுக, அதிமுக தலா 3 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது என்றும், திமுக கூட்டணியில் இரண்டு மக்களவைத் தொகுதியில் போட்டியிடவிருந்த மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியை ஒதுக்கி ஒரு இடத்தில் மாநிலங்களவை இடம் தருவது எனவும் ஒப்பந்தம் உருவானது.

இந்நிலையில் திமுக உறுதியளித்தபடி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைகோவை நிறுத்தியது. வைகோ மீது தேசத் துரோக வழக்கு உள்ளதால் தீர்ப்பின் நிலை எப்படி இருக்குமோ என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தீர்ப்பு ஓராண்டு சிறை தண்டனை என்பதால் பிரிவு 124(எ)-ன் கீழ் தண்டிக்கப்பட்டதால் தகுதியிழப்பு வராது என்பதால் வைகோ வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திமுக சார்பில் மற்ற இரண்டு வேட்பாளர்களும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள், பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் திடீரென திமுக சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக சார்பில் ஏன் கூடுதலாக ஒருவர் நிற்கவேண்டும் என்கிற கேள்வி எழுந்தது.

வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளராக அவர் நிறுத்தப்படுகிறார் என்று கூறப்பட்டது. மாற்று வேட்பாளர் என்றால் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மதிமுகவின் மல்லை சத்யாவோ அல்லது அடுத்தகட்டத் தலைவர்கள் வேறு யாராவது ஒருவர்தானே மாற்று வேட்பாளராகப் போட்டியிடவேண்டும்.

திமுக ஏன் அறிவிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. வைகோவுக்கு இல்லை என்றால் அது திமுகவுக்குப் போகவேண்டுமா? என்கிற கேள்வி மதிமுக தொண்டர்களிடையே எழுந்தது. திமுக மதிமுகவுக்கு மறைமுகமாக செக் வைக்கிறதா? என்கிற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் திமுகவில் சிலர், வைகோவின் மனு நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை இது அதிமுகவுக்கு வைக்கப்படும் செக் என்று தெரிவித்தனர். அதிமுக இன்றுள்ள நெருக்கடியில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள், அன்புமணியைப் பிடிக்காதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கலாம் அதை சாதகமாக்கினால் திமுகவுக்கு இரட்டை லாபம்.

ஒன்று திமுகவுக்கு ஒரு எம்.பி. கூடுதலாகக் கிடைக்கிறார். இரண்டு அதிமுகவில் அதிருப்தி உள்ளது என்பதை வெளிப்படுத்தலாம் என திமுக கணக்குப் போடுகிறது என்று தெரிவித்தனர். இதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம்தான் என்று நினைத்தபோது வைகோவின் பேட்டி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மாநிலங்களவை தொகுதி எனக்குதான் கொடுக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். அனைத்துக் கட்சிகளுக்கும் 2 இடங்கள் கொடுக்கப்பட்டபோது மதிமுகவுக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டது. மாநிலங்களவையை மதிமுகவுக்கு ஒதுக்கியதால் ஒரு இடம் என விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் யார் போட்டி என அப்போது வைகோ கூறவில்லை.

தற்போது திமுக ஒரு வேட்பாளரை அறிவித்தவுடன் இதுகுறித்து கேள்வி எழுப்பவேண்டிய வைகோ தனக்காக இந்தச் சீட்டு வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். நான்தான் மாற்று வேட்பாளரைப் போட்டியிட வைக்கச்சொன்னேன் என்று கூறியுள்ளார். அப்படி வைகோ மனு நிராகரிக்கப்பட்டு மாற்று வேட்பாளர் திமுக வென்றால், மற்ற கட்சிகளுக்கு 2 இடம் மதிமுகவுக்கு ஒரு இடம் என்றுதானே அர்த்தம் ஆகும்.

இந்நிலையில் இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திர துரைசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மாற்று வேட்பாளராக திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது யாருக்கு செக் வைக்க? மதிமுகவுக்கா? அதிமுகவுக்கா?

அதிமுகவில் அதிருப்தி உள்ளது. அவர்கள் ஒழுங்குமுறையில் இல்லை என்பதை நிரூபிக்க திமுக முயல்கிறது. முதல் ரவுண்டில் எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார். 3 எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு விவகாரத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றனர்.

அதை அவர் வாபஸ் வாங்கியவுடன் தகுதி நீக்கம் செய்துவிடுவோம் என்று கூறி அதையே தனக்கு சாதகமாக்கி இரண்டு எம்எல்ஏக்களையும் கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதனால் முதல் ரவுண்டில் தோற்ற ஸ்டாலின் இரண்டாவது ரவுண்டில் அதிமுகவை வெல்லலாம் என்கிற எண்ணத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். ஆகவே, அதிமுகவில் அதிருப்தி எண்ணம் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என்று எண்ணுகிறார்.

இது திமுகவுக்கே எதிராக மாறிவிட்டால்? ஒருவேளை வைகோவைப் பிடிக்காதவர்கள் அதிமுகவுக்குப் போட்டுவிட்டால்?

அப்படி ஆக வாய்ப்பில்லை. அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்படும் என்ற எண்ணத்தில்தான் நிறுத்துகிறார்கள். நீங்கள் சொல்வதுபோன்று நடந்தால் இரண்டாவது முறையும் எடப்பாடி பழனிசாமி வெல்கிறார் என்பது நிரூபணமாகும்.

ஒருவேளை மாற்று வேட்பாளர் போட்டியிட்டு அவர் வென்றால் அதிமுகவுக்கு சிக்கல்தானே. ஆட்சிக்குப் பிரச்சினை வருமா?

அதனால் பிரச்சினை வராது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவந்துதான் தோற்கடிக்க வேண்டும்ம். ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அது அதிமுகவுக்குள் பெரிய அதிருப்தி உள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கும். அதுவும் சிக்கல்தானே.

இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x