Last Updated : 09 Jul, 2019 03:53 PM

 

Published : 09 Jul 2019 03:53 PM
Last Updated : 09 Jul 2019 03:53 PM

சாலை பாதுகாப்பிற்காக 14 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் பயணம்: வித்தியாச தோற்றத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

மோட்டார் சைக்கிள் மற்றும் தனது ஆடைமுழுவதும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களுடன் திருப்பூரைச் சேர்ந்த சேவகர் ஒருவர் 14 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி(60). இவர் கடந்த 14 ஆண்டுகளாக சாலைபாதுகாப்பு விழிப்புணர்விற்காக மோட்டார் சைக்கிளில் முழுநேரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக இவரது ஸ்கூட்டர் முழுவதும் ஹெல்மெட் அணியுங்கள், அதிகவேகம் செல்ல வேண்டாம், சீட் பெல்ட் அணிவோம், ஒருவழிப்பாதையில் செல்லாதீர் என்று 50-க்கும் மேற்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி வைத்துள்ளார்.

மேலும் தனது உடையிலும் இது குறித்த வாசகங்களை முழுவதும் பிரின்ட் செய்துள்ளார். பின்இருக்கை முழுவதும் விழிப்புணர்வு அட்டைகளை வைத்தபடி பயணிக்கிறார். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் நின்று பிரசாரம் செய்கிறார்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பூரில் இருந்து தேனி வந்த இவரது பயணத்தை போலீஸ் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக ராஜபாளையம் சென்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மனைவியும் இல்லை. குடும்பப்பணி முடிவடைந்ததால் சாலை விழிப்புணர்வை முழு நேரப் பணியாக மேற்கொண்டு வருகிறேன்.

போலீசஸார் எனக்கு வழிநெடுகிலும் ஒத்துழைப்பு தருகின்றனர். சேவை உள்ளத்தோடு பலரும் ரூ100, ரூ.200 தருவர். வழியில் தங்குவதற்கு சிறிய இடம் கிடைக்கும். அல்லது பெட்ரோல்பங்கில் படுத்துக் கொள்வேன். வண்டிக்கு பெட்ரோல் போட பணம் இல்லாவிட்டால் போர்டை தொங்கவிட்டபடி காத்திருப்பேன். சேவை எண்ணம் உள்ளவர்கள் உதவுவார்கள்.

தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் சென்றுவிட்டேன். வரும் 16ம் தேதி 15-வது முறையாக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். தினமும் இவ்வளவு கிமீ.செல்ல வேண்டும் என்று கணக்கு வைத்துக் கொள்வது கிடையாது.

ரோட்டரி, பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நான் செய்வது சேவை என்பதால் பெட்ரோல், உணவிற்கு மட்டுமே பணம் பெற்றுக் கொள்ளுவேன்.

உடல் ஒத்துழைக்கும் வரையில் இப்பயணம் தொடரும் என்றார்.

ஸ்கூட்டரையும், இவரையும் பார்க்கவே வித்தியாசமாக இருப்பதால் வழிநெடுகிலும் பலரும் இவர் கூறுவதை ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x