Published : 07 Jul 2019 03:21 PM
Last Updated : 07 Jul 2019 03:21 PM

நீட் தேர்வை அரசியலாக்க கூடாது; சாதாரண மாணவர்கள் கூட மருத்துவம் படிக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது: விஜயகாந்த் வலியுறுத்தல்

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் முன்னிலை வகித்த மாணவ, மாணவியருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழகத்தில் நீர் தேர்வில் முதலிடம் பெற்றதை அடுத்து, மருத்துவப் படிப்புக்கான தேர்வு தரவரிசைப் பட்டியலிலும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ருதி அவர்கள் முதலிடம் பெற்று இருக்கிறார், அவருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவ படிப்புக்கான தேர்வு தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்ற அஸ்வின்ராஜ், இளமதி மற்றும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்கின்ற முறையில், ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும், அதுமட்டுமில்லாமல் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை இந்த நீட் தேர்வு உருவாக்கியிருக்கிறது.

பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர வேண்டிய நிலையை மாற்றி, இன்றைய நீட் தேர்வு முறை, எந்த ஒரு நிர்வாக ஒதுக்கீடும் இல்லாமல் சாதாரண மாணவர்கள் கூட மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. எல்லாவற்றையுமே அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டினுடைய வளர்ச்சி என்ற வகையில் சிந்திக்கவேண்டும். தமிழக மாணவ, மாணவியர்கள் மிகவும் திறமைசாலிகள்.

அவர்களுக்கு தமிழக அரசு முறையான கூடுதல் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் நீட் தேர்வில் இன்னும் அதிகமாக சாதிப்பார்கள். தமிழக மாணவ, மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த செயல் திட்டத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஏற்றுக்கொள்ளாது. தேசிய அளவில் ஒரே மாதிரியான கல்வி, ஒரே கேள்வித்தாள், ஒரே மாதிரியான மதிப்பீடு இருப்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு என்கின்ற செய்தி வந்த அதே நாளில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள், எனவே இதை அரசியலாக்காமல், மாணவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பொழுது இந்தியா முழுவதும் ஒரே திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தினால், தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை இடத்திற்கு வந்து, அதிக மருத்துவர்கள் வருங்கால தமிழ்நாட்டில் வருவார்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x