Published : 01 Jul 2019 11:10 AM
Last Updated : 01 Jul 2019 11:10 AM

சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பேருந்து இன்றி பொதுமக்கள் அவதி

சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மாதமும் போக்குவரத்து ஊழியர்களுக்கான மாத வருமானம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால், இன்னும் ஜூன் மாதத்திற்கான ஊதியம் கிடைக்கப் பெறவில்லை என, சென்னை மாநகர போக்குவரத்தைச் சேர்ந்த பல பணிமனைகளில் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் சிஐடியு, திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, அண்ணா நகர் மேற்கு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால், ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, பெரும்பாலானோர் ரயிலில் பயணித்ததால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மேலும், பலரும் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலானவர்கள் ஏற்றப்பட்டு பயணம் செய்ய வேண்டியிருந்தது.

ஜூன் மாத ஊதியத்தில் 60% தொகை மட்டுமே வழங்கப்படும் என போக்குவரத்து ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது வதந்தி எனவும், ஜூன் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலேயே ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனவும், போக்குவரத்துத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x