Published : 08 Jul 2019 02:29 PM
Last Updated : 08 Jul 2019 02:29 PM

மாநிலங்களவைத் தேர்தல்: அன்புமணி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத்ரேயன்(அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), கே.ஆர். அர்ஜுனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது.

அதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது.

தற்போதுள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுகவுக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்வு செய்யும் தகுதி உள்ளது.

திமுக போட்டியிடும் மூன்று இடங்களில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகியோரும், மீதமுள்ள ஒரு இடத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுகின்றனர். வைகோவுக்கு மாற்றாக திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார். இவர்கள் நால்வரும் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், அதிமுக சார்பில் 3 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக அக்கட்சியின் இளைஞணித் தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்தார். 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய, அன்புமணி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதற்கான மனுவை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் அளித்தார் அன்புமணி.

வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்கள் முஹம்மத் ஜான், என்.சந்திரசேகரன் | படம்:எல்.சீனிவாசன்

அதேபோல அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான அ.முஹம்மத் ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகிய இரு வேட்பாளர்களும் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கலின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x