Published : 10 Jul 2019 05:40 PM
Last Updated : 10 Jul 2019 05:40 PM

தேச விரோதிக்கு எம்பி பதவி- ட்விட்டரில் வைகோவை விமர்சித்த எச்.ராஜா: நெட்டிசன்கள் பதிலடி

தேசவிரோதி என நீதிமன்றம் தீர்ப்பளித்தவருக்கு எம்பி பதவியா என வைகோவை எச்.ராஜா விமர்சித்து பதிவிட அவருக்கு நெட்டீசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறந்த பார்லிமெண்டேரியன் என பெயர் வாங்கியவர். இந்திரா முதல் பல தேசிய தலைவர்களை தனது பேச்சாற்றலால் ஈர்த்தவர். பன்முக திறமைக்கொண்ட வைகோ திமுகவிலிருந்து விலகியதுமுதல் அவர் எம்பி ஆகவே இல்லை.

கடந்த 23 ஆண்டுகாலமாக எந்த பதவியிலும் இல்லாத அவரை ராஜ்ய சபாவுக்கு அனுப்புகிறது திமுக. ராஜ்யசபா எம்பியாக மீண்டும் களம்புகும் வைகோவின் வாதக்கணைகளை கண்டு பலரும் அஞ்சுகின்றனர். இந்நிலையில் வைகோ ராஜ்யசபா உறுப்பினர் ஆவதை எச்.ராஜா போன்றோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அது அவர் எம்பி பதவி ஏற்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. ஆனாலும் அவர் எம்பியாவதை எச்.ராஜா விமர்சித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா. சட்டத்தில் ஓட்டை”

அவரது பதிவுக்கு பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

தீனதயாளன்(Deena dayalan.G) என்பவர் பதிவில்,  “அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதை வைத்தே அவர் மீது தேசவிரோத வழக்கு போடப்பட்டது.

தங்கள் கட்சியில் உள்ளவர்களை போல் குண்டு வைக்கவில்லை. மேலும் தான் பேசிய கருத்தை வாபஸ் பெறாமல் வழக்கை எதிர்கொண்டார். தங்களைபோல் கோபத்தில் தெரியாமல் பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டு ஓடி ஒளியவில்லை” என விமர்சித்துள்ளார்.

பெர்சி (Perciyal) என்பவர் பதிவில், “ஆமா ஆமா, சட்டத்தில் ஓட்டை தான்... அதனால தான் நீங்க எல்லாம் இந்த பேச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க... ஜெயில்ல பிடிச்சு போடுங்க சார் இந்த அட்மின... ஓவரா துள்ளுராரு... எங்க ராஜா சார் பேர வேற கெடுக்கிறாரு” என கிண்டலடித்துள்ளார்.

கோகுல் கண்ணன் என்பவர் பதிவில் (M.GOKUL Kannan) “ ராசா.... அப்படியே இதை பத்தியும் கொஞ்சம் அவுத்து விடலாமே, மலேகன் குண்டுவெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டர்பைக் தனது அல்ல என்று சாத்வி ப்ரக்யா மறுத்து வந்த நிலையில்,  அது சனாதன போராளி சாத்வியின் சொந்த வாகனம் தான் என்பதை NIA உறுதி செய்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

கண்ணன் கருணாகரன், என்பவர் பதிவில் “நீதிமன்றத்திலும் போய் நான் தான் சொன்னேன்னு தைரியமா சொல்லிட்டு வந்தவர் எங்கே?, தெரியாம சொல்லிட்டேன்னு மன்னிப்பு கேட்ட ஆளு எங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சுலைமான் (Sulaiman Bin Saibullasha) என்பவர் பதிவில், “தலைக்கு தில்ல பத்தியா..தன் கட்சிக்காரங்களையே காட்டி குடுக்காரு” என கிண்டலடித்துள்ளார்.

சலாவுத்தீன் என்பவர், (Salahudeen) பதிவில், “உங்கள்மீது இறைவனின் அமைதி உண்டாகட்டும், நீங்கதான் நீதிமன்றமாவது __________ என்று சொன்னவராயிற்றே உங்களுக்கு என்ன நீதிமன்றம் பற்றி அவ்வளவு கவலை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x