Published : 01 Jul 2019 01:42 PM
Last Updated : 01 Jul 2019 01:42 PM

தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி: ஸ்டாலின் கண்டனம்

தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் கருத்து கண்டிக்கத்தக்கது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"இன்று குடிநீர் பிரச்சினை குறித்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வந்து, அதுகுறித்து நான் சில செய்திகளை பேசி இருக்கின்றேன். ஒட்டுமொத்தமாக இன்று ஒருநாள் முழுவதும் மற்ற பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு குடிநீர் பிரச்சினை குறித்து எல்லா சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நிலையில், நான் என்னுடைய கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் எடுத்துச் சொல்லியிருக்கின்றேன்.

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய குடிநீர் பஞ்சத்தை பற்றி கருத்து சொல்கின்ற பொழுது, வரம்பு மீறி தான் ஒரு ஆளுநர் என்பதையும் மறந்து சில செய்திகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதில் குடிநீர் பஞ்சத்திற்கு தமிழக மக்களையும் தமிழக அரசியல்வாதிகளையும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதில் அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்தால் கூட ஓரளவுக்கு தாங்கிக்கொள்ளக் கூடிய சூழ்நிலையைப் பெற முடியும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தமிழக மக்களை மிகக் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தும் விதமாக, கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள் என்று அநாகரிகமான முறையில் ஒரு ஆளுநர் தமிழக மக்களைப் பற்றி அவமானப்படுத்தக்கூடிய வகையில் பேசி அது பதிவாகியிருக்கின்றது.

அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று சட்டப்பேரவையில் நான் கேட்டேன். சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை. இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய சட்டத்துறை அமைச்சர் சண்முகம் எழுந்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மீது, ஏற்கெனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. எனவே அந்த வழக்கை சந்திக்கின்றவர். எனவே தமிழ்நாட்டு மக்களை பற்றியும், இந்த ஆட்சியைப் பற்றியும் பேசுவதற்கு அவருக்குத் தகுதி கிடையாது என்று அவரும் பேசியிருக்கின்றார்.

எனவே நான் பேசிய பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சார்ந்த சட்ட அமைச்சர் சண்முகம் பேசிய பேச்சும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது.

எனவே திமுகவைப் பொறுத்தவரையில் தமிழக மக்களை கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசி இருக்கக்கூடிய, புதுவை மாநிலத்தின் ஆளுநரின் கருத்து என்பது கண்டிக்கத்தக்கது. அதனை நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனை கண்டிக்கக்கூடிய வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கின்றோம்.

புதுச்சேரி ஆளுநர் கூறியதை ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை தான் வெளிவந்திருக்கின்றது'' என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

குடிநீர் பிரச்சினைகள் குறித்து நிதி அதிகமாக ஒதுக்கப்படுகின்றது. திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லி சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள். அதற்கு இந்த அரசினுடைய பதில் என்னவாக இருக்கின்றது?

எப்பொழுதும் போல 110 விதி, படிப்பது போல் படித்து விட்டு போய் விடுவார்கள். அவர்கள் கூறுவது ஏட்டில் அறிவிப்பாக வருமே தவிர செயல்பாட்டுக்கு எதுவும் தரப்போவதில்லை. கடந்த 8 வருடங்களாக இந்த ஆட்சியில் வெறும் அறிவிப்புகள்தான் இருக்கின்றதே தவிர செயல்பாட்டுக்கு வருவதில்லை.

குடிமராமத்து பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றார்கள். அதுகுறித்து உங்கள் கருத்து?

நாங்களும் கேட்டிருக்கின்றோம், பதில் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம். அதன் பிறகு நான் பதில் சொல்கின்றேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x