Published : 06 Jul 2019 08:13 AM
Last Updated : 06 Jul 2019 08:13 AM

வேட்டைத் தடுப்பு காவலர் தொகுப்பூதியம் ரூ.12,500 ஆக உயர்வு; விவசாயிகளுக்கு ரூ.39 கோடியில் 149 கிடங்குகள் புதிதாக கட்டப்படும்: 110-விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக வனத் துறையில் வனவளபாதுகாப்பில் ஈடுபடும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனே அரவை செய்ய உயர் தொழில்நுட்பத்துடன் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத்திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை ரூ.25 கோடியில் நடப்பாண்டில் நிறுவப்படும்.

எதிர்கால தேவை கருதி, கூடுதலாக 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் 28 கிடங்குகள் பல்வேறு இடங்களில் ரூ.59 கோடியே 40 லட்சத்தில் கட்டப்படும். கல்நார் மேற்கூரைகளுடன் இயங்கிவரும் 55 கிடங்குகளில் நவீன வண்ணம் தீட்டப்பட்ட துருப் பிடிக்காத மேற்கூரை ரூ.21 கோடியே 65 லட்சத்தில் அமைக்கப்படும்.

கிடங்குகளின் வளாகத்தில் உள்ள பழுதடைந்த சாலைகள், ரூ.54 கோடியே 44 லட்சத்தில் புதிய சிமென்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படும்.

கூட்டுறவு நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.36 கோடியே 41 லட்சத்தில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.

புதிய பண்டகசாலை

அரியலூர், புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி மண்டலங்களில் 5 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுமொத்த விற்பனை பண்டக சாலைகள் புதிதாக தொடங்கப்படும். புதிய முயற்சியாக 103 நியாயவிலைக் கடைகளில் தொடங்கப்பட்ட அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளை மேலும் விரிவுபடுத்தி ரூ.5 கோடியே 82 லட்சத்தில் 582 அம்மா அங்காடிகள் திறக்கப்படும்.

விவசாயிகள் தேவையை கருத்தில் கொண்டு 20 மாவட்டங்களில், 142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 12 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 100, 500, 1000, 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் மொத்தம் 36,500 மெட்ரிக்டன் கொள்ளளவில் 149 கிடங்குகள் ரூ.39 கோடியே 37 லட்சத்தில் புதிதாக கட்டப்படும்.

வனத் துறை

வனத் துறையின்கீழ் உள்ள வனப்பகுதி முழுவதையும், வனஎல்லைகளை துல்லியமாக புவியிடங்காட்டி (டி ஜிபிஎஸ்) மூலம்  வரையறை செய்ய ரூ.50 கோடியில் 3 ஆண்டுகளில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.

வனப்பகுதிகளில் உள்ள சாலைகளை ரூ.200 கோடியில் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வனவளங்களை பாதுகாக்க தமிழ்நாடுவனத்துறையில் 1,119 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வனத்துக்குள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவதால், அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்துரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x