மோடியால் மட்டும் தேர்வு செய்யப்பட்டவரே நாட்டின் நிதியமைச்சர்: நிர்மலா சீதாராமன் மீது வேல்முருகன் விமர்சனம்

மோடியால் மட்டும் தேர்வு செய்யப்பட்டவரே நாட்டின் நிதியமைச்சர்: நிர்மலா சீதாராமன் மீது வேல்முருகன் விமர்சனம்
Updated on
1 min read

மக்களால் அல்ல, மோடியால் மட்டும் தேர்வு செய்யப்பட்டவரே நாட்டின் நிதியமைச்சர் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "வளர்ச்சி என்று பிரச்சாரம் செய்தே பிரதமரானார் மோடி. ஆனால் அது வெறும் முழக்கம் ஆனதே மக்கள் கண்ட பலன். இம்முறை எந்த முழக்கத்தையும் எழுப்பாமலே பிரதமராகிவிட்டார். அதன் ரகசியம் அவருக்கே வெளிச்சம். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு பணியும் அவரது நிலையில் எந்த ரகசியமும் இல்லை. நாட்டின் பட்ஜெட்டையே அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார். அதற்காக மக்கள் தேர்வு செய்யாதவரையே நிதியமைச்சராக்கிறார்.

கடந்த ஐந்தாண்டுகளில் வாசிக்கப்பட்ட பட்ஜெட்டுகளை விடவும் துணிச்சலானது இந்த ஆண்டு பட்ஜெட்.

எப்படியெனில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு இன்னும் ரூ.2.5 லட்சம் என்றே வைக்கப்படுகிறது. இது கடந்த 15 ஆண்டுகளாகவே நீடிக்கிறது. பாஜக ஆட்சியில் அரசின் ஜிஎஸ்டி வருமானமும் இதர வகைகளிலான வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரமே தரப்படுகிறது.

ஆனால் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு மட்டும் ரூ.2.5 லட்சத்தில் அப்படியே நிற்கிறது. விலைவாசியும் இதரச் செலவுகளும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது அரசின் கண்ணுக்கு மட்டும் படுவதேயில்லை.

பட்ஜெட்டில் காட்டிய துணிச்சலுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு, பெட்ரோல்-டீசல் மீதான சிறப்பு கூடுதல் வரி உயர்வாகும். லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது என்று நிதியமைச்சர் வாசித்த மறுகணமே பெட்ரோல் விலையில் 2.50 ரூபாயும் டீசல் விலையில் 2.30 ரூபாயும் உயர்ந்துவிட்டது. பெட்ரோல்-டீசல் விலை பொருளாதார நிலையையே தீர்மானிக்கிறது என்பது தெரிந்தும் ஏற்றப்படுகிறதென்றால் அது கார்ப்பரேட்டுகளுக்காகத்தானே?

பொது விநியோக முறையை மேம்படுத்துவது குறித்த வார்த்தையே பட்ஜெட்டில் இல்லை. வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கான வழிகளும் இல்லை. விவசாயிகள், விவசாயத் துறை பற்றிய பேச்சே கிடையாது.

உற்பத்தி சார்ந்த தொழில்துறை வளர்ச்சியே ஒரு நாட்டை முன்னேற்றும். ஆனால் அப்படியான தொழில்துறை அழிக்கப்பட்டே வருகிறது இந்திய நாட்டில். இந்த பட்ஜெட்டும் அதையே பின்பற்றுகிறது. மோடியின் திட்டமே 'மேக் இன் இந்தியா'தானே? 'மெய்ட் இன் இந்தியா' அல்ல.

குறிப்பாக இந்த பட்ஜெட்டில் தமிழகம் கண்டுகொள்ளப்படவேயில்லை. பாரத்மாலா, சாகர்மாலா திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட் குறிப்பிடுவதற்குப் பொருள் சேலம்-சென்னை எட்டுவழிச்சாலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

நடுத்தர வர்க்கம் என்பதையே விரும்பாது, அதனை அழிக்க நினைக்கும் பாசிசம் என்பார்கள் அறிவியலாளர்கள். எனவே இந்த பட்ஜெட்டும் அவர்களுக்கு எதிராக இருப்பது வெளிப்படை. ஏழை எளியவர்கள் பாட்டைச் சொல்ல வேண்டியதில்லை. பட்ஜெட் அவர்கள் இருப்பதாகவே கொள்ளவில்லை.

மத்திய பாஜக மோடி அரசின் இந்த 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டைப் பற்றி சுருக்கமாக இப்படித்தான் கூற முடியும்: மக்களால் அல்ல, மோடியால் மட்டும் தேர்வு செய்யப்பட்டவரே நாட்டின் நிதியமைச்சர்! மக்களுக்காக அல்ல, மோடிக்காகவே ஒரு கார்ப்பரேட் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்", என வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in