

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி மோசடி, கப்பலில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி என திருப்பூரில் நூதன பண மோசடி புகார்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன் (20). பிளஸ் 2 படித்துள்ள இவர், வேலை தேடி வந்துள்ளார். இதற்காக, செய்தித்தாள்களில் வரும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை படித்து வந்துள்ளார். அந்த வகையில், கப்பலில் வேலை என்று கடந்த மே மாதம் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். இதற்கு, பிளஸ் 2 முதல் கல்வித் தகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதம்
இதையடுத்து, ஆர்வமுடன் மேற் கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க ராஜராஜன் முடிவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார். அதில் பேசியவர்கள், பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, கப்பலில் டெஸ்க் சூப்பர்வைசர் பணி இருப்பதாகவும், தங்களது வங்கிக் கணக்குக்கு ரூ.4500 பணம் அனுப்புமாறும், அதற்கு பிறகு படிவம் அனுப்பி வைக்கப்படும் என்றும், அந்த படிவத்தில் பணி குறித்த முழு விவரங்களும் குறிப் பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித் துள்ளனர். அதை நம்பி, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திய ராஜராஜனுக்கு, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து படிவம் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கார்த்திக் நாராயணன் என்பவர் ராஜராஜனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேற்கண்ட படிவத்தை அனுப்பி விட்டு, டெல்லியைச் சேர்ந்த ரோஷன் குமார் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
எதற்கு பணம் செலுத்தக் கூறுகிறீர் கள் என ராஜராஜன் கேட்டபோது, ‘பணிக்கான பயிற்சிக்கு தேவையான ஆடை, மடிக்கணினி, அலைபேசி போன்றவற்றுக்கான கட்டணம் அது. பணம் செலுத்தி 15 நாட்களுக்குள் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப் படும் என்று தெரிவித்துள்ளனர். அதன் படி, கடந்த 28-ம் தேதி ரூ.25 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் ராஜ ராஜன் செலுத்தியுள்ளார். அதற்கு பிறகு, அந்த நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் ராஜராஜனுக்கு வரவில்லை. அவர்களின் அலை பேசி எண்களை தொடர்புகொண்ட போதும் உரிய பதில் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜராஜன், திருப்பூர் மாநகர காவல் துறையில் நேற்று புகார் அளித்தார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்' நாளிதழிடம் ராஜராஜன் கூறும்போது, ‘க்ரூஸ் ஜாப்ஸ் இன் ஏசியா என்ற நிறுவனத்தின் பெயரில், அந்த விளம்பரம் வெளிவந்திருந்தது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து எனக்கு படிவம் அனுப்பி வைத்தனர். ஜூன் 12-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி தொடங்கும் என்றனர். ஜூன் 10-ம் தேதிக்குப் பிறகு, எனது அழைப்பை எடுப்பதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.
தற்போது, அந்த முகவரி, வங்கிக் கணக்கு எண், என்னிடம் பேசிய அலைபேசி எண்களை காவல் துறையில் சமர்ப்பித்துள்ளேன். என்னைப் போல் பலரும் விளம்பரத்தை பார்த்து, பணம் செலுத்தி மோசடியில் சிக்கியிருக்க அதிக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக உரிய முறையில் போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மாநகர காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பொதுவாக இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோர், போலி முகவரிகளைக் கொண்டே வங்கிக் கணக்கு, அலைபேசி சிம்கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். நூதன மோசடிகளின் வடிவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு வேண்டும். பணியில் சேர பணம் செலுத்த வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
பணத்தை செலுத்தும் முன்பாக நன்கு விசாரிப்பதும், சிந்திப்பதும் அவசியம். இந்த விவகாரத்தில் விளம்பரத்தைப் பார்த்து பலர் பணம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது. புகாரின்பேரில் விசாரிக்கப்படுகிறது' என்றனர்.
திருப்பூரைப் பொறுத்தவரை சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி கோடிக் கணக்கில் பண மோசடி நடைபெற்ற விவகாரத்தில், கடந்த வாரம்தான் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கப்பலில் வேலை என்ற புதிய வகை மோசடி தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.