Last Updated : 11 Jul, 2019 07:56 AM

 

Published : 11 Jul 2019 07:56 AM
Last Updated : 11 Jul 2019 07:56 AM

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு: திட்டமிட்டபடி தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரி தகவல்

ஜோலார்பேட்டையில் சோதனை ஓட்டத்தின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், திட்டமிட்டபடி சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக, ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டு சக்கர குப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகே புதிதாக பம்பிங் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காவிரி கூட்டுக் குடிநீர் உறிஞ்சப்பட்டு, மேட்டு சக்கர குப்பத்தில் இருந்து பார்ச்சம்பேட்டை வரை பொருத்தப்பட்டுள்ள ராட்சதக் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல பணிகள் நடந்தன. இப்பணிகள் நேற்று முன்தினம் முடிவடைந்ததையொட்டி சோதனை ஓட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கிடையே, மேட்டு சக்கர குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் ராட்சதக் குழாய்கள் புதைக்கப்பட்டதால் சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்த விவசாயி இளையராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு அதற்கு அருகே மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டு, அங்கு குழாய்கள் புதைக்கும் பணி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.

இதையடுத்து, நேற்று காலை மேட்டு சக்கர குப்பத்தில் இருந்து குடிநீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராட்சதக் குழாய்களில் பீறிட்டு வந்த காவிரி கூட்டுக் குடிநீர் ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்தபோது, அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனே, சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து, 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேகன்களில் தண்ணீரை நிரப்ப 40 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீரை 2 மணி நேரத்தில் ஏற்றலாம். மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து பார்ச்சம்பேட்டைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ‘பேரா மீட்டரை' கொண்டு தரத்தை சோதனை நடத்திய பிறகு வேகன்களில் நிரப்பப்படும்.

சோதனை ஓட்டத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டதால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், வில்லிவாக்கத்தில் குடிநீர் சேமிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் உடனடியாக குடிநீர் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும். திட்டமிட்டபடி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.

தற்போது, 1 அல்லது 2 ரயில்களில் மட்டும் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில், ரயில் நேரம், சிக்னல் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால், அதன் பிறகு 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x