Published : 10 Jul 2019 03:52 PM
Last Updated : 10 Jul 2019 03:52 PM

கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்பெற ஸ்டாலின் பேசவேண்டும்: தமிழிசை கருத்து

கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்பெற, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் ஸ்டாலின் பேசவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நமக்குத் தண்ணீர் திறந்துவிட்டுத்தான் ஆகவேண்டும். பக்கத்து மாநில முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சொல்வது ஆரோக்கியமான சூழ்நிலை. இதுதான் நடைபெற வேண்டும். இதில் எந்த விதத்திலும் அரசியல் உட்புகக் கூடாது. ஒருவேளை குமாரசாமி தனது பதவி பறிபோகப் போகிறது என்பதால், தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பேசுகிறாரா எனத் தெரியவில்லை.

கர்நாடகா தண்ணீர் திறப்பதற்கு எதிர்க்கட்சிகளும் வழிமுறை செய்யவேண்டும். ஸ்டாலின் போன்றவர்கள் கர்நாடகத்துடன் பேசவேண்டும் என்று நிறைய முறை சொன்னேன். ஆனால் கூட்டணிக் கட்சி என்ற வகையில் அவர்கள் வாய் திறக்கவில்லை. ஆனால் என்னைப் பொருத்தமட்டில், தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும். இதுவே எனது கருத்து'' என்றார் தமிழிசை.

முன்னதாக தமிழகத்தின் குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து காவிரியில் இருந்து தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் குமாரசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், விரைவில் தண்ணீர் திறக்கப்படும்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x