

தமிழகத்தில் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை மாற்ற வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் இரண்டாவது முறையாக டாஸ்மாக் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்களின் வாழ்க்கையை பாதிக்கும். டாஸ்மாக் கடைகளில் தற்போதுள்ள மதுப் பாட்டில்களில் பழைய விலையே உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே புதிய விலையை பதியவேண்டும்.
விலையேற்றம் காரணமாக அரசுக்கு 1800 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே டாஸ்மாக் விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் 10 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் பிரதி மாதம் முதல் தேதிகளில் விடுமுறை அளித்து மதுவிலக்கை நோக்கிய பாதையில் தமிழகம் நடைபோட வேண்டும். பணியாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.