Published : 05 Jul 2019 05:02 PM
Last Updated : 05 Jul 2019 05:02 PM

நாடு வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: முதல்வர் பழனிசாமி பாராட்டு

நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட்டங்களோடும், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் சமர்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறேன்.

'பாரத் மாலா' திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் மூலமாக மாநில அரசுகளின் சாலைக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு, தமிழ்நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே மிக அதிக சாலைகள் அடர்த்தி கொண்ட மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாட்டுக்கு, இத்திட்டத்தின் கீழ் போதிய நிதி ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பிரதமரின் சாலை மேம்பாட்டுத்தின் கீழ், 80,250 கோடி ரூபாய் செலவில், 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில், நல்ல சாலை கட்டமைப்பு ஏற்கெனவே பெற்றிருந்ததால், இத்திட்டத்தின் முழுமையான பயனை தமிழ்நாடு அடைய இயலாத நிலை இருந்தது. தற்போது அனைத்து கிராமப்புற சந்தைப் பகுதிகளுக்கும் சாலை வசதி அளிக்க உத்தேசித்துள்ளதால், இந்த மூன்றாவது கட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தின் முழு பயன் கிடைக்கும் என நம்புகிறேன்.

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை ஊக்குவிக்கவும், புறநகர் பகுதிகளில் ரயில்வே பயண வசதியை மேம்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் கீழ், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்துமாறும், கோவை மற்றும் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறும், சென்னை புறநகர் ரயில்வே சேவைகளை மேலும் மேம்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மின்சக்தித் துறையில் அதிக அளவில் மின் நுகர்வு செய்வோருக்கான மின் வழங்கல் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் திறந்தவெளி விற்பனை முறையில் விற்கக்கூடிய மின்சாரத்தின் மேல் விதிக்கப்படும் வரிகளை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பைப் பொறுத்தவரையிலும், பல்வேறு மானியங்களை பொறுத்தவரையிலும், மாநில அரசுகளின் வரம்புகளுக்குள் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து மாநில அரசுகளையும் கலந்து ஆலோசித்து, ஒப்புதல் பெற்று, கருத்தொற்றுமையை உருவாக்கிய பின்னர் இதனை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

2024 ஆம் ஆண்டுக்குள், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளிப்பதற்கான உயிர் நீர் இயக்கம், நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு குறைந்த நிலத்தடி நீர் உள்ள 1,592 வட்டாரங்களை கண்டறிந்து, நீர் சக்தி இயக்கத்தின் கீழ் அவற்றை மேம்படுத்துதல் போன்ற நீர்வள மேம்பாட்டுத் திட்டங்கள் பெரும் பயன்அளிக்கும். இவற்றை மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைத்து செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும்,

இந்த நிதிநிலை கூட்டத் தொடரிலேயே கோதாவாரி-காவேரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு இரண்டு சதவீத வட்டி மானியம் அளிப்பதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, ஆண்டொன்றுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சேவை வரி செலுத்தும் சலுகை மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய 3000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத் திட்டம், 100 புதிய கலைஞர்களுக்கான தொழில் தொகுப்புகளை தொடங்குதல் போன்ற அறிவிப்புகள் அதிக அளவில் இத்தகைய நிறுவனங்களை கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கு பயனளிக்கும். இவற்றை நான் வரவேற்கிறேன்.

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அறிவிப்பை பொறுத்தவரையில், இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு ஆற்றிவருவதை கருத்தில் கொண்டு, தேவைப்படும் சில இனங்களில் மட்டும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கலந்து ஆலோசித்த பின்பே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

விவசாயத் துறையில் 'பூஜ்ய பட்ஜெட் பண்ணையம்' என்கிற இயற்கை வேளாண்மை நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும் என்கிற அறிவிப்பினை வரவேற்கும் அதே நேரத்தில், பல்வேறு மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் அபிவிருத்தி திட்டங்களுக்கு கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பெரிதும் வரவேற்கிறோம். குறிப்பாக, அனைத்து சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கும் 5,000 ரூபாய் வரை மிகைப் பற்று வசதி அளிக்கப்பட்டுள்ளதும், ஒவ்வொரு குழுவிலும் ஒரு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுவதும், சுயஉதவிக் குழுக்கள் தொழில் செய்வதற்கு பேருதவியாக அமையும்.

இந்தியாவில் வானுர்தி தயாரிப்பு, ஊடகம், காப்பீடு, அனிமேஷன் ஆகிய துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. இதன்மூலம், தமிழ்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து நேரடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ள தொழில் முனைவோரின் முதலீடுகள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன்.

அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையை நான் வரவேற்கிறேன்.

மேலும், பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி, தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்", என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x