Last Updated : 10 Jul, 2019 09:51 AM

 

Published : 10 Jul 2019 09:51 AM
Last Updated : 10 Jul 2019 09:51 AM

தொல்லியல் துறை விதியை மீறி தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி: கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோழர்கள் கால கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் திகழ்கிறது. இக்கோயில் உலக மரபுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்களை காணவும், பெருவுடையார், வராகி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடவும் நாள்தோறும் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பெரிய கோயில் அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில்,500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நேற்றுமுன்தினம் மாலையில் தொடங்கியது. நேற்று தொடர்ந்து பணிகள் நடைபெற்ற நிலையில், இதனால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து, பெரிய கோயில் பாதுகாப்புக் குழுவினர் கூறியபோது, “ராஜராஜ சோழன் சிலை அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 120 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் வராததால், புதிதாக 500 அடி ஆழ ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றிலும் 1 கி.மீ தொலைவுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கக்கூடாது என்பதுதொல்லியல் துறையின் விதிகளில்ஒன்று. ஆனால், அந்த விதியைமீறி ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுவரும் நிலையில், 216 அடிஉயரமும், ஒன்றரை லட்சம் டன்எடையும் கொண்ட கோபுரம் உள்ளிட்ட கோயில் கட்டுமானங்களுக்கு ஆபத்து ஏற்படும்” என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, “ராஜராஜ சோழன் சிலை உள்ள இடத்தில் உள்ள பூங்கா மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் இல்லாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்துவிட்டன. எனவேதான் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கிறோம். இந்த இடம் ஏற்கெனவே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வேறு யாரிடமும் அனுமதி பெறவில்லை” என்றனர்.

தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியபோது, "இக்கோயிலை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. கோயிலின் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கக்கூடாது என்பதுதொல்லியல் துறை விதி. எனவே, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது” என்றார்.

இதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, கோயிலின் உள்ளே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அப்போது, தண்ணீருக்கு பதிலாக சிறிய கற்கள் மற்றும் மண் துகள்கள் மட்டுமே வெளியேறின. அவற்றை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள், மண்ணைக் கொண்டே கோயிலின் அடிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டு அப்போது பணி நிறுத்தப்பட்டது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x