Published : 03 Jul 2019 05:21 PM
Last Updated : 03 Jul 2019 05:21 PM

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவது கடினமல்ல: திருமாவளவன்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குடியரசுத் தலைவரது ஆலோசனையின் பேரில் தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எடுத்த முன்முயற்சியின் காரணமாக மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு , கன்னடம் ஆகிய 5 மொழிகளில் முதலில் தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று தெரியவந்திருக்கிறது.

இந்த மொழிகள் பேசும் மாநிலங்களில் இருந்து வரும் மேல்முறையீடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழில் சட்டம், நீதி தொடர்பான கலைச்சொற்கள் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.

எனவே, தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவது கடினமல்ல. உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் இதற்காக ஒருமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

தமிழை நீதிமன்றத்தில் பயன்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடாமல் தவிர்த்திருப்பது ஏற்புடையதல்ல. உடனே இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட வகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்", என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x