Published : 06 Jul 2019 11:04 AM
Last Updated : 06 Jul 2019 11:04 AM

சட்டத்துடன் முரண்படாத வைகோவுக்குத் தண்டனை என்பது சட்டத்துக்கே எதிரானது: வேல்முருகன்

சட்டத்துடன் முரண்படாத வைகோவுக்குத் தண்டனை என்பது சட்டத்துக்கே எதிரானது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தமிழர்கள் அழிப்புக்குத் துணைபோனது இந்திய அரசு. அந்தக் குற்ற நடவடிக்கைகளின் தொகுப்புதான் 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்ற நூல். மதிமுக பொதுச்செயலர் வைகோ எழுதிய இந்த நூலை அவர் 2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் வெளியிட்டார். அப்போது அவர் பேசிய பேச்சு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று குற்றம்சாட்டி, அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு கடந்த ஆண்டு, அதாவது 2018 கடைசியில், மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஜெ.சாந்தி என்பவர் இதனை விசாரித்து வந்தார்.

வழக்கை விரைந்து முடிக்கவே சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதாகச் சொல்லப்பட்டது உண்மையல்ல. மக்களவைத் தேர்தலில் வைகோ போட்டியிடத் தயாராகையில் வழக்கில் அவர் தண்டனை பெறும் தீர்ப்பை வர வைப்பதுதான் நோக்கம்.

ஆனால் மக்களவைக்கு அவர் போட்டியிடவில்லை. ஆகையால் இப்போது மாநிலங்களவைக்குப் போட்டியிடும் நிலையில் தீர்ப்பு வந்திருக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக்கான பிரிவு 124 ஏ. இது பிரிட்டிசார் பயன்படுத்திய பிரிவு. பெரியார், காந்தி ஆகியோர் மீதெல்லாம் பாய்ந்த பிரிவு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி என்எல்சி முன் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தியதற்காக என் மீதும் இந்த 124 ஏ பதியப்பட்டிருக்கிறது.

ஆனால் இப்போது பிரிட்டனில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் இந்த 124 ஏ கிடையாது. மக்களவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கூட, இந்த 124 ஏ-யினை நீக்குவோம் என்று அறிவித்திருந்தது. உச்ச நீதிமன்றமே, 'இன்னும் ஏன் 124 ஏ, நீக்குங்கள்' என்று மோடி அரசுக்கும்தான் சொல்லியாகிவிட்டது.

ஆனாலும் பாசிச பாஜக அரசு 124 ஏ-யினை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டுள்ளது; அரசியல் பழிவாங்கலைத் தொடர்கிறது. இன்று வைகோவை 124 ஏ கவ்வியிருக்கிறது.

இந்திய தேச இறைமை என்பது என்ன? மக்கள் இல்லாமல் வெறும் நிலப்பரப்புக்கு ஏது இறைமை? தேசம் என்பது இடவாகுபெயர். எனவே மக்கள்தான் தேசம், மக்களிடம்தான் உள்ளது இறைமை. அது முழுக்க முழுக்க மக்கள் உரிமை.

கருத்துரிமை அடிப்படை உரிமை எனும்போது பேசுவது எப்படி இறைமைக்கு எதிராகும்? வைகோ பேசியதால் உண்டான விளைவைச் சொல்லாமலே குற்றச்சாட்டை நிரூபித்ததெப்படி?

வைகோ என்றாலே உதறல் எடுக்கும் காவி வகையறாக்களுக்கு; அவர் மாநிலங்களவைக்கு வந்துவிட்டாலோ மூச்சே நின்றுவிடலாம்.

இதே போன்ற குற்றச்சாட்டில் முன்பு ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டிருந்தார் வைகோ. அந்த வழக்கிலேயே கருத்துரிமைக்குத் தடையில்லை என்றது உச்ச நீதிமன்றம். ஆனால் அருவருக்கும் விதத்தில்  124 ஏ-யினை ஆயுதமாகத் தாங்கியுள்ளது மோடி அரசு.

ஒரு நாகரிக சமூகத்தில், ஜனநாயக தேசத்தில் ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு என்ன வேலை? மோடி அரசு முடிவு செய்துகொள்ளட்டும்.

சட்டத்துடன் முரண்படாத வைகோவுக்குத் தண்டனை என்பது சட்டத்துக்கே எதிரானது", என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x