எழுவர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

எழுவர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி
Updated on
1 min read

எழுவர் விடுதலையில் இனி ஆளுநரே இறுதி  முடிவு எடுக்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்துஆளுநர் இன்னும் முடிவெடுக்காத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)  சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம்,'' 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’’எழுவர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையைச் சரியாகச் செய்தோம். இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்.

தமிழக அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில், அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டோம். திமுக ஆட்சிக் காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம்'' என்றார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ''எங்கள் ஆட்சியில் கிடைக்காத வாய்ப்பு, உங்களுக்குக் கிடைத்துள்ளது. எனவே இதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மீண்டும் பேசிய முதல்வர், ''சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனால் ஒருவரை மட்டுமே விடுதலை செய்ய முடியாது. ஒருவரை (நளினியை) மட்டும் விடுதலை செய்யவேண்டும் என்று திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல அல்லாமல், ஏழு பேரையும் விடுதலை செய்ய நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம். இறுதி முடிவு என்பது ஆளுநரின் கையில்தான் உள்ளது'' என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in