

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும் விரைவில் அதிமுகவில் ஐக்கியமாவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்ட நிலையில், 18 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்கள் நீதிமன்றத்தால் தகுதி நீக்கமும் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாச்சலம்) ஆகிய மூவரும் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து, அரசு தலைமை கொறடா,கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத்தலைவருக்கு பரிந்துரைத்திருந்தார்.
பேரவைத்தலைவர் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்த நிலையில், மூவரும் உச்ச நீதிமன்றம் சென்று, பேரவைத்தலைவரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை பெற்றனர்.
இந்நிலையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக தோல்வியடைந்ததால், அக்கட்சியில் இருந்து பலரும் விலகி வருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி சந்தித்து, அதிமுகவின் பக்கம் உள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அவரின் மனமாற்றத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும் விரைவில் அதிமுகவில் ஐக்கியமாவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பூங்கா ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''எம்எல்ஏ ரத்தினசபாபதி இவ்வளவு நாட்களாக அமமுகவில் அவுட் ஆஃப் போகஸில் இருந்தார். இப்போது முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்று, அதிமுகவில் இணைந்து நல்ல ஃப்ரேமுக்குள் வந்துவிட்டார்.
எல்லோரும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். கழகம் தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ரத்தினசபாபதியைத் தொடர்ந்து, பிரபு எம்எல்ஏவும் விரைவில் முதல்வரைச் சந்திப்பார்'' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.