

நீதிமன்ற உத்தரவை மீறி, நீட் தேர்வை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர், அழகு முத்துக்கோன் குருபூஜை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதனை முன்னிட்டு அழகு முத்துக்கோனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, தமிழிசை அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாதப் பொருளாக்குவது தவறு. அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்வு குறித்து தெளிவான விளக்கத்தை சட்டப்பேரவையில் கொடுத்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கிறோம் என்று தமிழக கட்சிகள் நீட்டை அரசியலாக்க வேண்டாம் என்று, சென்னை உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
நீட் தேர்வால் பல்வேறு தரப்பினர் பலனடைந்துகொண்டிருக்கின்றனர். மக்களும் மாணவர்களும் நீட்டை ஏற்றுக்கொண்டனர். இதை தமிழக அரசியல் கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்'' என்றார் தமிழிசை.