Last Updated : 03 Jul, 2019 04:23 PM

 

Published : 03 Jul 2019 04:23 PM
Last Updated : 03 Jul 2019 04:23 PM

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் மழைநீர்: பரிந்துரைக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மழைநீரை சேமித்து பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்பவியல் மையம் பரிந்துரைத்துள்ளது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வரியின் மூலம் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கிவிட்டது, திருக்குறள். அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமான தண்ணீர், ஒருகாலத்தில் அதிகளவில் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பிரச்சினை அதிகரித்துள்ளது.‘தண்ணீருக்கு ஆதாரம் மழை. இதன்படி தமிழகத்தில் சராசரியாக குளிர் காலத்தில் 5 சதவீதமும், கோடை காலத்தில் 15 சதவீதமும், தென்மேற்கு பருவ காலத்தில் 35 சதவீதமும், வடகிழக்கு பருவ காலத்தில் 45 சதவீதமும் மழை பொழிகிறது’ என்கிறார் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்பவியல் மைய இயக்குநர் எஸ்.பன்னீர் செல்வம். அவர் கூறியதாவது:

வருடத்தில் 66 நாட்கள் மழை நாட்கள். அதாவது 2.5 மி.மீ. மழைப்பொழிவு காணப்படும் நாட்கள் மழை நாட்கள் என கணக்கிடப்படுகிறது. இந்நிலை யில், மழை நாட்கள் 44-ஆக குறைந்துவிட்டன. பருவமழை பொய்த்து விட்டது. குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் போதியளவு நீரில்லை. தற்போது தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 43 மி.மீ. அளவுக்கு பெய்ய வேண்டும். இதில் பாதியளவு கூட பெய்யவில்லை. ஜூலை மாதம் 68 மி.மீ. மழை பெய்ய வேண்டும். அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.

வரும் காலங்களில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை, ஓரிரு நாட்களில் 40 மி.மீ., 50 மி.மீ., 100 மி.மீ. என மொத்தமாக பெய்துவிட்டு, நீண்ட இடைவெளிக்கு பிறகே மீண்டும் மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

வீடு, நிறுவனங்கள் போன்ற கட்டிடங்களில் மணல், கற்கள், மண் என அடுக்குகளை உரு வாக்கி மழைநீர் சேமிப்பு கட்டமைப் புகளை உருவாக்கினால், மழைநீர் வேகமாக நிலத்துக்குள் செல்லும். அதாவது சாதாரண நிலப்பகுதி கடினமாக இருப்பதால் மழைநீர் நிலத்துக்குள் செல்லாமல் வழிந்தோடுகிறது. ஆனால் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வழியாக மழைநீர் வடிகட்டப்பட்டு, நிலத்தின் கீழ்ப்பகுதியை சென்றடைகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

மழை நீரை வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற இடங்களில் சேகரித்து பயன்படுத்த முடியும். முதலில் கட்டிடத்தின் மேற்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை பெய்யும்போது ஒரு மணிநேரம் மழைநீரை வெளியேறச் செய்துவிட்டு, பின்னர் குழாய் மூலமாக சிமென்ட் தொட்டிகள், ரப்பர் தொட்டிகளில் சேமித்து வைத்து குடிப்பதைத் தவிர பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

திறந்தவெளியில் அகலமான பாத்திரங்கள் வைத்து, அதன்மூலம் மழைநீரை சேகரித்து குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் ஆண்டு மழையளவு 950 மி.மீ. ஆகும். பெருநகரங்களில் 15 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் மூலமாக 2 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும். ஒருவருக்கு நாளொன்றுக்கு 100 லிட்டர் தண்ணீர் தேவை என்று வைத்துக்கொண்டால், 5 பேர் கொண்ட குடும்பத்தில் ஆண்டுக்கு 1,82,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். 18,000 லிட்டர் தண்ணீர் மிஞ்சிவிடும்.

மழைநீரை சேமித்து பயன்படுத்துவதில் முறையான பராமரிப்பு அவசியம். மழைப்பொழிவு தொடர்ச்சியாக இருக்காது.

இடைவெளி கிடைக்கும் தருணங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்து, பின்னர் மழைப்பொழிவின் போது சேமித்து வைத்துக் கொள்ளலாம். தண்ணீரில் கிருமிகள் உருவானால் ‘குளோரின்’ தெளித்து அழிக்கலாம். வடகிழக்கு பருவமழையின்போது, அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப் புள்ளது. அதற்கேற்ப மழைநீரை சேகரித்து பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x