Published : 06 Jul 2019 12:42 PM
Last Updated : 06 Jul 2019 12:42 PM

வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டு நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன்: வைகோ பேட்டி

மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றால் தமிழ்நாட்டு நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் என்று மதிமுக தலைவர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுக தலைவர் வைகோ இன்று (சனிக்கிழமை) காலை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய வைகோ, ''தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றால் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக, தமிழக வாழ்வாதாரங்கள் மீது கோரத் தாக்குதல்கள் நடத்தப் படையெடுத்து வருகிற மத்திய அரசின் திட்டங்களைத் தடுத்து நிறுத்த, ஈழத்தமிழர்களின் உரிமையைக் காப்பதற்காக, இந்திய நாட்டின் மதச்சார்பின்மையை, கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்க, ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு அழிந்துபோகாமல் காக்க, தமிழகத்தின் நன்மைக்காக, திராவிட இயக்க லட்சியங்களைப் பாதுகாக்க, படையெடுத்து வருகிற கலாச்சார ஆக்கிரமிப்புகளைத் தடுக்க என் கடமையை அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றுவேன். இந்த உறுதியை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேச துரோக வழக்கில் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தலைவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றி. 9-ம் தேதி மனு பரிசீலனைக்குப் பிறகு நான் மாநிலங்களவை செல்வேனா என்று தெரியும். மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களையும், எல்லாத் தரப்பினரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது''.

இவ்வாறு தெரிவித்தார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x