Published : 09 Jul 2019 18:08 pm

Updated : : 09 Jul 2019 18:08 pm

 

மாற்றுத் திறனாளிகள் நடத்தும் கனவு உணவகத்துக்கு குவியும் வரவேற்பு: ரூ.30 லட்சத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைப்பு

30

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளே நடத்தும் வகையில்  ரூ.30 லட்சம் செலவில் நவீன கனவு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக 'இந்து தமிழ்' இணையத்திடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விரிவாகப் பேசினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு ஏராளமான மாற்றுத் திறனாளிகள் வருவர். அரசு வேலை வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பர்.

அரசுப் பணியை நாம் வழங்கமுடியாது என்பதால், அவர்களைத் தற்சார்பு மிக்கவர்களும், சுய தொழில் செய்பவர்களாகவும் மாற்ற எண்ணினோம். அவர்களில் ஆர்வம் மிக்க உள்ளூர் மாற்றுத்திறனாளிகள் 15 பேரைத் தேர்வு செய்தோம்.

கால்களை இழந்தவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், ஒரு கை இல்லாதவர், காது கேட்காதவர் எனக் கலவையான மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டது. உணவக மேலாண்மை நிறுவனத்தை அணுகி, விஷயத்தைச் சொன்னோம். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

சமைப்பது, பேக்கிங், ஓட்டல் மேலாண்மை குறித்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கற்றுத் தரப்பட்டன. சிஎஸ்ஆர் நிதி மூலம் நவீன உபகரணங்களைக் கொண்டு உணவகத்தை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைத்தோம். 30 லட்சம் ரூபாய் செலவில் கனவு உணவகம் உருவாக்கபட்டது.

ஐஓசிஎல், சமையல் மற்றும் பேக்கிங் உபகரணங்களை வாங்கிக் கொடுத்தது. கேன்டீன் உள்கட்டமைப்பு வசதிகளை சவுத் கங்கா நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது. பார்க்கிங் மற்றும் இருக்கை வசதிகளை ராம்கோ நிறுவனத்தினர் செய்துகொடுத்தனர்.

இந்த உணவகம் நேற்று (ஜூலை 8) திறக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு மாதங்களுக்கு ஓட்டல் மேலாண்மை நிறுவனம் மேற்பார்வையில் உணவகம் இயங்கும். அதற்குப் பிறகு தனியாகவே அவர்கள் இயங்குவர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து சந்திப்புகள் நடக்கும். அதற்கு டீ, காபி, சிற்றுண்டிகள் வாங்கப்படும். அவையனைத்தையும் கனவு உணவகத்தில் இருந்தே பெற்றுக் கொள்வோம். எங்களுடைய ஊழியர்களையும் அதே உணவகத்தைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஒரே நாளில் அவர்களுக்கு ரூ.6,000 வரை வருமானம் கிடைத்துள்ளது. இதேபோன்ற முயற்சிகளை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினால், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வும் ஒளிபெறும்'' என்கிறார் சந்தீப் சந்தூரி.

 

கனவு உணவகத்தில் வேலைபார்க்கும் கண்ணன் இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். ''எனக்கு ஒன்றரை வயசுல போலியோ தாக்கி, இடது கால் ஊனமாகிடுச்சு, என்னை மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒரு குறைபாடு. இதுக்கு முன்னாடி ஃபைனான்ஸ் கம்பெனில வேல பாத்துக்கிட்டு இருந்தேனுங்க. 15 பேருல சிலர் சின்னச் சின்ன வேல செஞ்சிட்டு இருந்தாங்க. 10 பேருக்கு வேலை எதுவும் கிடைக்கல. கலெக்டர் யோசனைப்படி, ட்ரெய்னிங் எடுத்துகிட்டு இப்போ கனவு உணவகத்தைத் தொடங்கி இருக்கோம்.

இங்க கவுன்ட்டர்லயும் சேல்ஸ்லயும் இருக்கேன். பயங்கர சுறுசுறுப்பா கடை ஓடுது. மக்களும் ஆர்வமா வந்து சாப்பிட்டு போறாங்க. எங்க வாழ்க்கைய மாத்தின எல்லாருக்கும் நன்றி'' என்கிறார் கண்ணன்.

கனவு உணவகங்கள் தமிழகம் முழுவதும் நனவாகட்டும்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

மாற்றுத் திறனாளிகள்கனவு உணவகம் ரூ.30 லட்சம் ஆட்சியர் அலுவலகம்தூத்துக்குடிசந்தீப் நந்தூரி

You May Like

More From This Category

More From this Author