

சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தலா 5 லிட்டர் மதிப்பிலான தண்ணீர் கேன்களைப் பரிசாக வழங்கினர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. நீர்நிலைகளைத் தூர்வாராதது உள்ளிட்ட காரணங்களாலேயே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பல மாவட்டங்களில் மக்கள், பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத அவலநிலையும் உள்ளது.
இந்நிலையில், அம்பத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு தண்ணீர் கேன்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சென்னையை அடுத்த அம்பத்தூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், திருமண ஜோடிகளுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் தலா 5 லிட்டர் மதிப்பிலான தண்ணீர் கேன்களைப் பரிசாக வழங்கினர்.
மண்டபத்தில் சிரிப்பலைகளை வரவழைத்தாலும், தண்ணீர் சிக்கனத்தை உணர்த்துவதாக இது அமைந்தது.