

பாரதிய ஜனதா கட்சியில் ஜி.கே.வாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்தால் வரவேற்போம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி வந்த பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் அமரரான பிரபல தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே காங்கிரஸில் பூசல் நிலவி வருகிறது. இந்திரா காந்தி, சோனியா காந்தி என யாருமே மக்களுக்கு நன்மை செய்யவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறமை மிக்க அரசியல்வாதி. அவருக்கு எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. ஆனால், அப்போதைய நிலை வேறு. இப்போதுள்ள நிலை வேறு. புதிய கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதை கணிக்க முடியாது. அதேசமயம் ஜி.கே.வாசன் பா.ஜ.க.வில் இணைந்தால், நாங்கள் வரவேற்போம்.
ரஜினியையும் பா.ஜ.க.வில் சேர வரவேற்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் வரவேற்க பா.ஜ.க. தயாராக இருக்கிறது. கங்கை நதியில் எது இணைந்தாலும் அது தூய்மை பெறும். அதுபோல அனைத்து கட்சியினரையும் பா.ஜ.க இணைத்துக் கொள்ளும்.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு எடுத்து அறிவிக்கும். மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண நரேந்திர மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆட்சி அமைந்தவுடனேயே வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலம் இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்களும், அவர்களது படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இப்பிரச்சி னையை இந்திய அரசு, தூதரகம் மூலமும் சட்டரீதியாகவும் எதிர் கொள்ள உள்ளது. மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு என்பது இந்திய அரசின் கடமை. அதற்காக 10-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு சதவீதத்தைக்கூட காங்கிரஸ் செய்யவில்லை.
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார். காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா?. அதுபோலத்தான் இதுவும் என்றார்.
இதன் பின்னர் உடுமலை சாலையில் என்.ஐ.ஏ. கல்விக் குழும வளாகத்தில் அமைந்துள்ள நா.மகாலிங்கம் நினைவிடத்தில் அமைச்சர் மலர் அஞ்சலி செலுத்தினார்.