

மது ஒழிப்புப் போராளி நந்தினி, அவர் தந்தை ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (55). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நந்தினி (24) வழக்கறிஞர், மது ஒழிப்புப் போராளி. தங்கை நிரஞ்சனா சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார்.
நந்தினி படிக்கும்போதே தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து மதுக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் மீதும் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நந்தினி 2 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நந்தினி தனது தந்தையுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீஸாரைத் தாக்கியதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் ஜூன் 27-ம் தேதி அன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நந்தினி தந்தையுடன் ஆஜர் ஆனார். அப்போது, சாட்சியளிக்க வந்த போலீஸாரிடம் நந்தினி சில கேள்விகளை எழுப்பினார். IPC 328-ன் படி போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என எச்சரித்தார். அங்கிருந்த நந்தினியின் தந்தை ஆனந்தனும் மகள் எழுப்பிய கேள்வியில் தவறு ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இருவரையும் அவமதிப்பு வழக்கில் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின், “நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டோம்’’ என எழுதிக் கொடுத்தால் இருவரையும் விடுவிப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனால், நந்தினிக்கும், குணா ஜோதிபாசுவுக்கும் மதுரையில் ஜூலை 5-ம் தேதி அன்று நடைபெற இருந்த திருமணம் நின்றுபோனது. அன்று இருவரும் சிறையில் இருந்தனர். நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதில்லை என்ற நந்தினியின் முடிவை மணமகன் குணா ஜோதிபாசு மற்றும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு திருமணத்தை நடத்துவது என முடிவெடுக்கபட்டது. நந்தினியை விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் நந்தினி ஜாமீன் கோரிய வழக்கு இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.