Published : 08 Jul 2019 01:04 PM
Last Updated : 08 Jul 2019 01:04 PM

நீட் பிரச்சினையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றக் கோரிய ஸ்டாலின்; நிராகரித்த ஓபிஎஸ்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிராகரித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) கேள்வி நேரம் முடிந்த பின்னர், நீட் தேர்வு தொடர்பாக திமுக சிறப்பு கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "நீட் எதிர்ப்பு மசோதாக்கள் நிரகாரிப்பைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் கொண்டுவர வேண்டும். 27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களை நிராகரிப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

மத்திய அரசுக்கு சட்டங்களை இயற்ற அதிகாரம் இருப்பது போலவே மாநில அரசுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் இருக்கிறது. நீட் விவகாரத்தில் மாநில அரசின் மசோதாக்களை நிராகரித்ததன் மூலம் சட்டப்பேரவையின் ஆணிவேரை மத்திய அரசு அசைத்துப் பார்த்திருக்கிறது" என்றார்.

காங்கிரஸை குறைகூறிய விஜயபாஸ்கர்..

அப்போது குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சிதான் நீட் தேர்வை கொண்டுவரக் காரணம். திராவிடக் கட்சிகள் கொள்கையில் உறுதியாக உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி நாடகமாடுகிறது  எனக் குற்றஞ்சாட்டினார்.

இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராமசாமி பேசினார். காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் நீட் தேர்விலிருந்து ஓராண்டு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. காரசார விவாதங்களுக்கு இடையே காங்கிரஸ் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

நீட் தேர்வை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசிடம் சரியான பதிலில்லை என ராமசாமி சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நிராகரித்த ஓபிஎஸ்..

தொடர்ந்து பேசிய முதல்வர் நீட் பிரச்சினையில் நல்ல முடிவு எட்டப்படும் என்று மட்டும் கூறினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் வாதாடியவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம். நீட் விவகாரத்தில் காஙிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.

நீட் தேர்வு பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் எல்லாம் நிறைவேற்ற இயலாது ஆனால் உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும்"என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x