Last Updated : 06 Jul, 2019 02:52 PM

 

Published : 06 Jul 2019 02:52 PM
Last Updated : 06 Jul 2019 02:52 PM

புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள் வெளிநடப்பு: ஆளுநர் தலைமையில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டம் பாதியில் ரத்து

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற மாநில திட்டக்குழு கூட்டத்திலிருந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியில் ரத்தனாது.

புதுச்சேரியில் 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் தற்போதுள்ள நிதி ஆதாரம், துறை வாரியாக பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம், திட்டக்குழுவின் தலைவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில், தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், எம்பிக்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் கூட்டம் தொடங்கி சுமார் 30 நிமிடங்களாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை பாதியில் புறக்கணித்து திடீரென வெளிநடப்பு செய்தனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், மாகே பிரதிநிதி ஆகியோரை இந்த திட்டக்குழு கூட்டத்துக்கு அழைக்க வேண்டுமென துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பினேன். ஏற்கெனவே சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அந்த கோப்புகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். எம்பி கோகுலகிருஷ்ணன் இந்த கூட்டத்துக்கு வரும்போது சட்டப்பேரவை அரசியல் கட்சித் தலைவர்களை நீங்கள் ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்.

கடந்த 2017-18-ம் ஆண்டில் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளோம். சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு நானும், அமைச்சர்களும் தான் பதில் கூற வேண்டும். துணைநிலை ஆளுநரோ, அதிகாரிகளோ பதில் சொல்லப்போவதில்லை. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தை கேட்பது முக்கயமானது. அதுவும் திட்டக்குழு கூட்டத்தில் கருத்து கேட்பது மிகவும் முக்கியமானது.

எனவே சட்டப்பேரவை கட்சி தலைவர்களை அழைக்காததை கண்டித்தும், அவர்களை அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்தோம்", என்றார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, என்னுடைய தரப்பு நியாயத்தையும் ஊடகத்திடம் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார். உடனே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து முதல்வரும், அமைச்சர்களும் சென்றவுடன் செய்தியாளர்களை ஆளுநர் கிரண்பேடி சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்த முறை நமது பட்ஜெட்டுக்காக தயாராகும் முறையில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் சிறந்த நிலையில் உள்ளது. சில தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டம் இன்று நிகழாமல் போய்விட்டது. அது சரியான காரணங்களாகவும் இருக்கலாம். திட்டக்குழு தலைவர் என்ற முறையில் வரும் வாரம் இதே கிழமை இதே நேரம் இக்கூட்டம் நடைபெறும்.

திட்டக்குழுவுக்கு யாரை அழைக்கவேண்டும் என்றாலும் விதிமுறைகளின்படி அழைக்கலாம். திட்டக்குழுவின் தலைவராக எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. திட்டக்குழுவில் சிலர் 2016-2017-ல் இருந்துள்ளனர்.

ஆனால் 2018-19-ல் அவர்கள் உறுப்பினர்களாக இல்லை. இதில் நிறைய குழப்பங்கள் உள்ளது. கோப்புகளில் தெளிவாக ஏதும் குறிப்பிடவில்லை.

திட்டக்குழு செயலரிடம் மறுபரிசீலனை செய்து அமைச்சர்களிடம் கேட்டறிந்து அதன்படி பரிந்துரை பெற்று யார் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கின்றனரோ அவர்கள் அழைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் விதிமுறைப்படி திட்டக்குழு செயலர் தலைமைச்செயலர், பின்னர் எனக்கு முறைப்படி வரவேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் இதில் இருப்பது சிறந்ததே. ஏனெனில் எவை உள்ளது எவை இல்லை என்பதை அவர்களும் அறிந்து கொள்வர்", என்றார்.

ஆளுநர் கிரண்பேடியும்-முதல்வர் நாராயணசாமியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிகொண்டு திட்டக்குழு கூட்டம் பாதியிலேயே ரத்தான சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x