Published : 02 Jul 2019 08:51 AM
Last Updated : 02 Jul 2019 08:51 AM

மார்க்சிய அறிஞர் ஞானிக்கு மரியாதை!

கோவையைச் சேர்ந்த மார்க்சிய அறிஞர் ஞானியின் வீட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது இலக்கியப் பார்வை குறித்த ஆய்வரங்கம், ஞானிக்கு மரியாதை செலுத்துவதாய் அமைந்திருந்தது.

பேராசிரியர்கள், திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் நடத்திய இந்த விழாவில், க.ஜவஹர், கு.முத்துக்குமார், சோ.பிலிப் சுதாகர் தொகுத்துள்ள ‘கோவை ஞானியின் திறனாய்வு நெறி வாசிப்பும் மதிப்பீடும்’,  இர.ரவிச்சந்திரன் தொகுத்துள்ள, ‘ஞானியும் தமிழ் தேசியக் கருத்தாக்கமும்!’ நூல்களை விஜயா பதிப்பகம் உரிமையாளர் மு.வேலாயுதம் வெளியிட, டெல்லி இரா.அறவேந்தன், சூலூர் புலவர் செந்தலை ந.கெளதமன் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து,  ஞானியின் மார்க்சிய-பெரியாரிய ஆய்வுகள், பெண்ணிய ஆய்வுகள், மார்க்சிய நெறி, இயங்கியல் தத்துவம், இதழியல் பங்களிப்பு என 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில்,  அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உரையாற்றினர்.

"ஏற்கெனவே பேராசிரியர்கள், எழுத்தாளர்களிடம் ஞானியின்  படைப்பிலக்கியம், திறனாய்வு மற்றும் இதழியல் பணி குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பெற்றிருந்தோம். அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அவர் இல்லத்திலேயே எளிமையான முறையில் இந்த நிகழ்வை நடத்தியுள்ளோம்" என்றார் கு.முத்துக்குமார்.

கவிஞர் மஞ்சுளா தேவி பேசும்போது, "ஞானியின் பெயரால் ஒரு விருது வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டை விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் செய்ய வேண்டும்" என்றார்.

பேராசிரியர் சோ.பிலிப் சுதாகர் ‘ஞானியும் தமிழ் தேசியமும்’ என்ற தலைப்பில் பேசும்போது, "ஒரு நூற்றாண்டு காலமாக தமிழன் கண்ட கனவுகளெல்லாம் உடைந்து, சிதைந்து,  நொறுங்கிக் கொண்டிருக்கும்போது நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பார் ஞானி.  உலகிலேயே மனிதப் பண்பாட்டை வளர்ப்பதற்கு முயன்ற  தொல்நாகரிகமாக தமிழர்களின் நாகரிகத்தை நிறுவுகிறார் அவர். தமிழர்களின் வாழ்வியலையும் அவர் வித்தியாசமான முறையிலேயே பார்க்கிறார். தமிழனின் 10 ஆயிரம் ஆண்டு தொடர்ச்சியில், பண்பாடு, நாகரிகம் என நகர்ந்த இந்த சமுதாயம்,  கடைசி 2 ஆயிரம் ஆண்டுகளில் ஒப்புரவு என்ற வடிவத்திலே இலக்கியப் பதிவுகளாக இருப்பதை தன் கட்டுரைகளில் சொல்லுகிறார்.

ஒப்புரவும், சமத்துவமும் இன்றைக்கு சமதர்மமாகவும், சம உரிமையாகவும் மலர்ந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.  சுரண்டலும், ஒடுக்குமுறையும் நம்மை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கும்போது, ஒட்டுமொத்தமாக நம் மொழியையும், இனத்தையும் இழந்து கொண்டிருக்கும் தருணத்தில், இந்திய அளவில் எதிர்த்துப் போராடாமல் தமிழ் மக்களுக்கு விடுதலை இல்லை என சுட்டுகிறார். மறுவாசிப்பை சாமன்யர்களிடமிருந்தே ஆரம்பிக்கிறார். அவர்களிடமிருந்து அதை எப்படிப் பார்க்கலாம் என்று சொல்லுவதாலேயே, தமிழ் தேசியம் கனம் பெறுகிறது" என்றார். இர.மீனா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x