Last Updated : 10 Jul, 2019 11:58 AM

 

Published : 10 Jul 2019 11:58 AM
Last Updated : 10 Jul 2019 11:58 AM

மக்காச்சோளத்தில் படைப்புழு: போடி அருகே வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

போடி பகுதியில் படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து வேளாண் விஞ்ஞானிகள் இப்பகுதியில் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். தடுப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

போடிநாயக்கனூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் கோடைகால பயிராக 70 ஹெக்டேர் அளவிற்குப் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இப்பயிரில்  அமெரிக்கன் படைப்புழு தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது.

நடப்பாண்டிலும் இந்தப்புழுவின் தாக்குதல் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக விஞ்ஞானிகள் மாவட்டம்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது போடி காமராஜபுரத்தில் படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழுவினர் இப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹர்பாய் தலைமை வகிக்க, உதவி இயக்குநர் அமலா முன்னிலை வகித்தார்.

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக மத்திய பயிர் பாதுகாப்புத்துறை இயக்குநர் டாக்டர் பிரபாகரன், பூச்சியியல்துறை தலைவர் சாத்தையா, படைப்புழு கட்டுப்பாட்டு மண்டல அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பயிர்களை பார்வையிட்டனர்.

தொடர்ந்து இவற்றைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்தபோது, "இப்புழுவை கட்டுபடுத்த ரசாயனமருந்தை தெளித்தால் போதும் என்று நினைப்பது தவறு. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இதன்படி ஆழமான உழவின் மூலம் கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு வெயில் மற்றும் பறவைகளால் அழிக்கப்படும்.

கடைசி உழவின் போது ஒரு ஹெக்டேர்க்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும். விதைகளை 10 கிராம் பிவோபியா பேசியானா என்ற நுண்ணுயிர் கொல்லி அல்லது 10 கிராம் தயோமி தாக்சம் ஆகியவற்றின் மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பயிர்நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாக பரவும். எனவே வரிசைக்கு வரிசை 60 செமீ பயிர்க்கு பயிர் 25 செமீ இடைவெளி விட வேண்டும். விதைத்த 15-ம் நாள் வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்க வேண்டும். இதன் மூலம் அந்துப்பூச்சி இலைகளில் முட்டையிடுவது தடுக்கப்படும்.

விதைத்த 5நாட்களில் ஹெக்டேர்க்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வைக்க வேண்டும்.

தட்டைப்பயறு, எள், சாமந்தி பயிர்களை வரப்பிலும், பயறுவகை பயிர்களை ஊடுபயிராகவும் வளர்த்தால் இயற்கை ஒட்டுண்ணிகள் அதிகளவில் பெருகி படைப்புழுவினை தாக்கி அழிக்கும்.

இளம்புழுக்களை கையால் சேகரித்தும் அழிக்கலாம்.

மக்காச்சோளப் பயிரையே மீண்டும் சாகுபடி செய்யாமல், வேறு பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் டாக்டர் கண்ணன் மக்காச்சோள வயலினை பார்வையிட்டு விவசாயிகளுக்கு பல்வேறு விளக்கங்கள் அளித்தார்.

ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) செந்தில்குமார், மாநில திட்டங்கள் துணை இயக்குநர் இளங்கோவன், அட்மா திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறை குறித்த துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x