

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கூடுதலாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தார். இதனால் தேர்தல் நடக்கும் சூழல் உருவானது பின்னர் இன்று அவர் மனுவை வாபஸ் பெற்றதால் தேர்தல் இன்றி 6 பேரும் தேர்வாகின்றனர்.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைவதை ஒட்டி புதிதாக 6 ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. இதில் திமுக சார்பில் 2 பேரும், திமுக ஆதரவில் வைகோவும் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் 2 வேட்பாளர்களும் அதிமுக ஆதரவில் பாமகவின் அன்புமணியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு இருந்தது, ஆனால் திமுக சார்பில் 4-வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ திடீரென வேட்புமனு தாக்கல் செய்தார். தேசத் துரோக வழக்கில் ஒரு வருட சிறைத் தண்டனை பெற்ற வைகோவின் மனு ஏற்கப்படாமல் போனால் மாற்று வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டது.
வைகோவின் மனு ஏற்கப்பட்டதை அடுத்து திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ தமது மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதன் மூலம் அதிமுகவில் முகமது ஜான், சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவில் வில்சன், சண்முகம், வைகோ ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக போட்டியின்றி தேர்வாகின்றனர்.
மொத்தம் 11 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் 4 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இந்நிலையில் என்.ஆர் இளங்கோ வாபஸ் பெற்றதை தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.